தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இனிமேல் வழக்கம்போல் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள் கடைகள் தவிர, மால்கள், திரையரங்குகள் ஆகியவை மூடப்பட்டன.

அதேபோல் கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலையின் முழுமுடக்கத்தின் போது டாஸ்மாக் கடைகளும் முழுவதுமாக மூடப்பட்டது.  டாஸ்மாக்குடன் இயங்கி வந்த பார்களையும் மூட கடந்த மே மாதம் 10-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது.

கொரோனா பாதிப்பு குறைந்து அடுத்தடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கும் தளர்வு அளிக்கப்பட்டது. அதன்படி ஜூலை மாதம் 5 ஆம் தேதி முதல் முதல் கட்டமாக பகல் 12 மணி வரை மட்டுமே மதுக்கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில் அடுத்ததாக 12 மணிக்கு திறக்கப்பட்டு 9 மணிக்கு மதுக்கடைகள் மூடப்பட்டன. 

இந்நிலையில் கொரோனா காலத்தில் டாஸ்மாக் வருமானம் குறைந்தது. இத்தகைய சூழலில் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டதையடுத்து டாஸ்மாக் மதுகடைகள் திறக்கப்படும் நேரம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்றியமைக்கப்பட்டது. 

TASMAC

காலை நேரமே மதுக்கடைகள் திறக்கப்பட்டதன் காரணமாக காலையில் எழுந்தவுடனே டாஸ்மாக் கடை வாசலில் மதுப்பிரியர்கள் கூட்டமாக குவிந்து கிடப்பதாகவும், இதனால் வீடுகள் மற்றும் பொதுஇடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாகவும், கள்ளச்சந்தைகளில் மதுவிற்பனை நடப்பதாகவும் விமர்சனம் எழுந்தது. 

எனினும் கொரோனா தொற்று அதிகமுள்ள இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படமால் இருந்து வந்தன. இந்நிலையில் தமிழக அரசு தற்போது மதுக்கடைகளை திறக்கும் நேரத்தை மீண்டும் மாற்றி அமைத்துள்ளது. இதுதொடர்பாக என டாஸ்மாக் மேலாண் இயக்குனர்  வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டாஸ்மாக் கடைகள் வருகின்ற 5-ஆம் தேதி முதல் பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என டாஸ்மாக் மேலாண் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். 

கொரோனா தொற்றுக்கு முன்னர் இருந்த நேரத்தின்படி தற்போது டாஸ்மாக் நேரம் மாற்றப்பட்டதால் குடிமகன்கள் மத்தியில் உற்சாகத்தை அளித்துள்ளது.

கொரோனா காலங்களில் டாஸ்மாக் மது விற்பனை குறைந்ததால் கடும் நஷ்டம் ஏற்பட்டதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்பதால் அதன் வருமானம் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றவும் அனைத்து டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.