இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை கீர்த்தி சுரேஷ் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில், மோகனலால் நடிப்பில் இன்று (டிசம்பர் 2) வெளியான  மரக்கார் அரபிகடலின்டே சிம்ஹம் படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக மலையாளத்தில் நடிகர் டொவினோ தாமஸ் உடன் இணைந்து வாஷி படத்தில் நடித்து வருகிறார். 

தொடர்ந்து தெலுங்கில் மகேஷ்பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா மற்றும் தமிழில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கும் சாணி காயிதம் உள்ளிட்ட படங்கள் கீர்த்தி நடிப்பில் அடுத்தடுத்து தயாராகி வருகின்றன. மேலும் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் போலா ஷங்கர் படத்தில் சிரஞ்சீவியின் தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்திசுரேஷ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக தெலுங்கில் இயக்குனர் நாகேஷ் குக்குன்னூர் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் குட் லக் சகி. இத்திரைப்படத்தில் நடிகர்கள் ஜெகபதி பாபு மற்றும் ஆதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் தயாரித்துள்ள குட் லக் சகி படத்தை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் வெளியிடுகிறது. 

குட் லக் சகி படத்திற்கு சிரத்தன் தாஸ் ஒளிப்பதிவு செய்ய, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் சேட்டையான நடிப்பில் வரும் டிசம்பர் 10-ஆம் தேதி வெளிவரவிருக்கும் குட் லக் சகி திரைப்படத்திலிருந்து கலகலப்பான புதிய பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியானது. இப்பாடல் வீடியோவை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.