“போலி மது, கள்ள மது மக்களை சீரழிக்கக் கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன என்றும், கொரோனா தடுப்பு விதிகள் மீறப்பட்டால் டாஸ்மாக் மூடப்படும்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் 2 வது அலையாகப் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா தொற்று பரவலை முற்றிலுமாக தடுப்பதற்காகத் தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. 

அதன் படி, இன்று முதல் ஒரு வார காலத்திற்கு வருகிற 21 ஆம் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இதனால், பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் தமிழகத்தில் அமலுக்கு வந்து உள்ளது. 

அதே நேரத்தில், தமிழகத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது, தற்போது படிப்படியாகக் குறைந்து காணப்படுகிறது.

இந்த நிலையில், கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி தொற்று குறைய உதவிய மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேசி வெளியிட்டுள்ள வீடியோவில், “அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனா ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்திருக்கிறது” என்று, குறிப்பிட்டு உள்ளார். 

“தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால், 2 வார காலத்தில் அனைத்தும் கட்டுக்குள் வந்து உள்ளது என்றும், ஊரடங்கு உத்தரவை மக்கள் முறையாகப் பின்பற்றியதால் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து உள்ளது” என்றும், அவர் பெருமிதம் தெரிவித்து உள்ளார். 

அத்துடன், “பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன என்றும், இதற்குக் காரணம், தமிழகத்தில் போலி மது, கள்ள மதுவானது, தமிழ்நாட்டை சீரழித்துவிடக் கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கிறது என்றும், அப்படித் திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள் முழுமையாக கட்டுப்பாடுகளைப் பின்பற்றி இயங்கும்” என்றும், அவர் கூறியுள்ளார். 

“டாஸ்மாக் கடைகளில் கட்டுப்பாடுகள் மீறப்பட்டால், தளர்வுகள் திரும்பப் பெறப்படும் என்றும், கட்டுப்பாட்டை மீறுபவர்கள் தங்களுக்கும் நாட்டுக்கும் தீமை செய்பவர்கள் என்பதை உணர வேண்டும்” என்றும், முதலமைச்சர் எச்சரிக்கையாகவே தெரிவித்து உள்ளார். 

மேலும், “காவல் துறை கண்காணிப்பு இல்லாமலேயே மக்கள் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும் என்றும், முழு ஊரடங்கிற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், மக்கள் நடந்து கொள்ள வேண்டும்” என்றும், அவர் வேண்டுகோள் விடுத்து உள்ளார். 

அதே போல், “பொது போக்குவரத்து விரைவில் இயக்கப்பட வேண்டும் என்றும், பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும். தொற்று பரவலைத் தகர்க்கும் வல்லமை மக்களுக்கு உள்ளது” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.

குறிப்பாக, “தமிழக அரசின் விதிகளைப் பின்பற்றி நடந்து கொண்ட மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி” என்றும், முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.