தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக வேலூர் மாநகராட்சி ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங், பிரேசில் உள்ளிட்ட நான்கு நாடுகளில் மட்டுமே பரவியிருந்த ஒமிக்ரான் வைரஸ், 14 நாட்களில் தற்போது உலகின் பல நாடுகளில் பரவியுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தால் அக்குறிப்பிட்ட நாடுகள் உயர் எச்சரிக்கை நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

ஆகையால் அந்நாடுகளிலிருந்து வருகை தரக்கூடிய நபர்கள் குறித்த விபரங்கள் சேகரிக்க இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தன. அதன்படி நேற்று கர்நாடகா மாநிலத்தில் உள்ள விமான நிலையத்தில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த 10 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. 

அதில் இருவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அது ஒமிக்ரானா என சோதனை செய்த போது அது ஒமிக்ரான் கொரோனா என தெரியவந்தது. இதனால் இந்தியாவிலும் ஒமிக்ரான் கொரோனா பரவியது. 

இது மக்களிடையே சற்று அச்சத்தை ஏறபடுத்தியுள்ளது. இதையடுத்து தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் “கொரோனாவைத் தொடர்ந்து ஆல்ஃபா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், காமா என்று கொரோனா உருமாற்றம் அடைந்து தற்போது  ஒமிக்ரான் வந்துள்ளது. 

omicron vaccine

ஒமிக்ரான் வைரஸ் குறித்து முழுமையாக இன்னும் தெரியவில்லை. ஒமிக்ரானின் தன்மை, வேகம் ஆகியவற்றைப் பொறுத்து என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படலாம் என்பது குறித்து பின்னர்தான் தெரிய வரும்.
 
ஆகையால் தடுப்பூசி என்பது உயிர்ப்பாதுகாப்பு தொடர்புடையது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  தற்போது தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை தமிழகம் முழுவதும் 78 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது.  இருந்தபோதும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்.

தற்போது உருவாகியுள்ள ஒமிக்ரான் வைரசின் பரவுதல் தன்மை பிற அனைத்து வைரஸ்களைக் காட்டிலும் கூடுதலாக உள்ளது என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைரசின் வீரியம் இன்னும் தெரியவில்லை என்பதால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். 

பொதுசுகாதார விதிகளின்படி பொது இடங்களுக்குச் செல்பவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். இதுகுறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே முடிவெடுப்பார்கள். தமிழகம் முழுவதும் தற்போது 3 ஆயிரம் உள்ளாட்சிகளில் 100 விழுக்காடு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

ஊரடங்கு போன்ற அறிவிப்புகள் வரக்கூடாது என்பதற்காகத்தான் தமிழக அரசு ஒமிக்ரான் விசயத்தில் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. முகக்கவசம், தடுப்பூசி என இந்த இரண்டு விசயங்களில் தமிழக மக்கள் கவனம் செலுத்தினால், ஊரடங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை. 

vellore vaccine

ஒரு சில நாடுகளில் கொரோனாவுக்காக மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்துகிறார்கள். இங்கு அதற்கான தேவை எழவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் வழிகாட்டுதலின்படி வேலூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள டீக்கடைகள், வங்கிகள், பள்ளி கல்லூரிகள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் செல்ல அனுமதி கிடையாது என்றும், விதிமுறைகளை பின்பற்றாத பொதுமக்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேலூர் மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

ஏற்கெனவே கிருஷ்ணகிரி ஆட்சியர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது வேலூர் மாவட்டமும் தடுப்பூசி செலுத்தாதோர் பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்து ஆணை பிறப்பித்திருக்கிறது.