தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சீயான் விக்ரம் தனது சிறந்த நடிப்பால் பல கோடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமாக, மிக பிரம்மாண்ட படைப்பாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் எனும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விக்ரம்.

மேலும் டிமான்டி காலனி & இமைக்கா நொடிகள் ஆகிய படங்களின் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் கதாநாயகனாக சீயான் விக்ரம் நடித்துள்ளார். மிரட்டலான பல வித்தியாசமான கெட்டப்புகளில் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

முன்னதாக இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கும் நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள மகான் திரைப்படமும் விரைவில் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அடுத்ததாக தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான பா.ரஞ்சித் இயக்கத்தில் புதிய படத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (டிசம்பர் 2)வெளியானது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் K.E.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த புதிய திரைப்படத்தின் அடுத்தடுத்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த ஆண்டு வெளிவந்த இயக்குனர் பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட்டான நிலையில் சீயான் விக்ரமுடன் பா.ரஞ்சித் இணைந்துள்ள இந்த புதிய திரைப்படமும் தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.