“தமிழ்நாட்டில் 90 லட்சம் பேருக்கு மதுப் பழக்கம் இருப்பதாக  மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் எப்போதும் பண்டிகை கால நாட்களில் டாஸ்மாக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். மது பிரியர்களால், குறிப்பிட்ட இந்த நாட்களில் மட்டும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் மதுபானங்கள் விற்பனையாவது தான் தமிழகத்தில் வாடிக்கையாக நடந்துகொண்டிருக்கும் விசயமாக இருக்கிறது.

இந்த நிலையில் தான், “தமிழ்நாட்டில் சுமார் 90 லட்சம் பேருக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதாக” மத்திய அரசு அதிர்ச்சி தரும் தகவலைத் தெரிவித்திருக்கிறது. 

அதாவது, இந்தியா முழுவதும் இளைஞர்கள் மத்தியில் குடிப்பழக்கம் மற்றும் போதைப் பழக்கம் அதிகரித்து வருவது குறித்தும், மாநில வாரியாக இது தொடர்பாக புள்ளி விவரங்களை வழங்குமாறு உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். 

இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், இது தொடர்பான தகவல்கள் இடம் பெற்றிருப்பதன் மூலம் தமிழகத்தின் உண்மையான நிலை என்ன? என்பது தெரிய வந்திருக்கிறது.

மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, “இந்தியா முழுவதும் சுமார் 15,01,16,000 பேருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக” அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதில், “அதிக பட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 3,86,11,000 பேருக்கு, இந்த மது அருந்தும் பழக்கம் இருக்கிறது” என்று, கூறப்பட்டு உள்ளது. 

முக்கியமாக, “தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், சுமார் 90 லட்சம் பேருக்கு மதுப் பழக்கம் இருக்கிறது” என்கிற, அதிர்ச்சி தகவலும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, “கஞ்சா பழக்கத்தை பொறுத்த வரை, இந்தியா முழுவதும் 2,90,00,000 பேருக்கு இந்த போதைப் பழக்கம் இருக்கக்கூடியது” தெரிய வந்திருக்கிறது.

அதிலும் குறிப்பாக, “தமிழ்நாட்டில் சுமார் 1,04,000 பேருக்கு இது கஞ்சா போதைப் பழக்கம் இருக்கிறது என்றும், தமிழ்நாட்டின் அருகில் உள்ள கேரளா மாநிலத்தில் சுமார் 3,52,000 பேருக்கு இந்த கஞ்சா போதை பழக்கம் இருக்கிறது” என்றும், அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

அதே போல், “பக்கத்து மாநிலமான ஆந்திராவில் 4,43,000 பேருக்கு இந்த கஞ்சா போதைப் பழக்கம் இருக்கிறது” என்றும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள இந்தப் பட்டியலில், “இந்தியாவிலேயே அதிக பட்சமாக உத்தரப் பிரதேசத்தில் தான் சுமார் 1,20,31,000 பேருக்கு கஞ்சா போதைப் பழக்கம் இருக்கிறது” என்று, தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மிக முக்கியமாக, “இந்தியா முழுவதும் போதை மாத்திரைகளை சுமார் 1,86,44,000 பேர் பயன்படுத்து வருகின்றனர் என்றும், இதில் தமிழ்நாட்டில் 1,54,000 பேருக்கு இப்படியாக போதை மாத்திரை பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது” என்றும், மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

மேலும், “இது 18 வயது முதல் 75 வயது வரையில் உள்ளவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே, இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாகவும்” அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

அத்துடன், “இளைஞர்களிடம் இத்தகைய போதைப் பழக்கங்களைக் குறைப்பதற்காக இந்தியா முழுவதும், கிட்டதட்ட 272 மாவட்டங்கள் கண்டறியப்பட்டு
உள்ளன என்றும், அதன் படி 8 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்கள் தன்னார்வலர்களாக இந்த மீட்பு பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்” என்றும், கூறப்பட்டு இருக்கிறது. 

முக்கியமாக, “போதை பழக்கத்தில் இருப்பவர்களை, மீட்கும் பணிகளில், நாடு முழுவதும் 350 க்கும் அதிகமான ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது” என்றும், மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.