இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான டாப்ஸி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களிலும் அடுத்தடுத்து நடித்து வருகிறார். முன்னதாக தெலுங்கில் டாப்ஸி நடித்துள்ள மிஷன் இம்பாசிபிள் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

தொடர்ந்து பாலிவுட்டில் லூப் லப்பேட்டா, தோபாரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள டாப்ஸி, ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக ஹிந்தியில் தயாராகும் ப்ளர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதோடு தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். மேலும் தமிழில் ஜன கண மன மற்றும் ஏலியன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் டாப்ஸி.

இந்த வரிசையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனான மிதாலி ராஜ்-ன் பயோபிக் திரைப்படமாக தயாராகியுள்ள சபாஷ் மித்து படத்தில் மிதாலி ராஜ் கதாபாத்திரத்தில் டாப்ஸி நடித்துள்ளார். வயாகாம்18 ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கியுள்ள சபாஷ் மித்து படத்திற்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார்.

சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்துள்ள சபாஷ் மித்து படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு (2022) பிப்ரவரி 4-ஆம் தேதி சபாஷ் மித்து திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என மிதாலி ராஜின் பிறந்த நாளான இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சபாஷ் மித்து படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.