திருமணத்திற்கு முன்பான காதல், கள்ளக் காதலாகத் தொடர்ந்த அவலத்தால், உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவியே கள்ளக் காதலன் உடன் சேர்ந்து கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த 38 வயதான முத்துகுமார், தனது 31 வயதான மனைவி சுமித்ரா உடன் வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 

இப்படியான நிலையில், 38 வயதான முத்துகுமார், அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வந்தார். 

அதே நேரத்தில், முத்துகுமாரின் மனைவி சுமித்ரா திருமணத்துக்கு முன்பே, அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவரை காதலித்து வந்திருக்கிறார். ஆனால், இவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதிக்காத நிலையில், பெற்றோரின் வற்புறுத்தலினால், தனது உறவினரான முத்துகுமாரை அவர் முறைப்படி திருமணம் செய்துகொண்டு உள்ளார்.

அத்துடன், காதலன் சுந்தருக்கும் திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். 

மேலும், சுமித்ராவுக்கு வேறொருவருடன் திருமணம் ஆன பிறகும் சரி, காதலன் சுந்தருக்கும் வேறொரு பெண்ணுடன் திருமணம் ஆன பிறகும் சரி, இருவருக்கும் இடையேயான திருமணத்திற்கு முன்பான காதல், அப்படியே கள்ளக் காதலாக மாறி உள்ளது. இதனால், இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

மனைவியின் கள்ளக் காதல் விசயம், கணவன் முத்துகுமாருக்கு தெரிய வந்த நிலையில், கடும் அதிர்ச்சியடைந்த அவர், தனது மனைவி அழைத்துக் கண்டித்து உள்ளார்.

இப்படியாக, கள்ளக் காதலுக்கு இடையூறாக கணவன் முத்துகுமார் இருந்ததால், அவரை கொலை செய்ய தனது கள்ளக் காதலன் உடன் சேர்ந்து சுமித்ரா திட்டமிட்டு உள்ளார்.

அதன் படி, நேற்று முன் தினம் இரவு கணவன் முத்துகுமார் மது போதையில் வீட்டிற்கு வந்து தூங்கிக் கொண்டிருந்தார். 

அப்போது, தனது கள்ளக் காதலன் சுந்தரை வீட்டுக்கு வரவழைத்த சுமித்ரா, இருவருமாகச் சேர்ந்து கணவன் முத்துகுமாரின் முகத்தில் தலையணையால் அமுக்கியும், கழுத்தில் போர்வையால் நெரித்தும் கொடூரமாகக் கொலை  செய்துள்ளனர். இதில், அவர் மூச்சுமுட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

அதன் பிறகு, முத்துகுமாரின் உடலை வீட்டின் வாசலில் தூக்கிப்போட்டு விட்டு, “என் கணவர் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்து விட்டதாக” கூறி, நாடகம் ஆடி உள்ளார். 

அவர் உயிரிழந்த பிறகு, அவர் மயங்கிதான் கிடக்கிறார் என்று கூறி, அவர் மனைவியே தனது கணவனின் உடலை, மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், “முத்துகுமார் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக” கூறி உள்ளனர்.

இது தொடர்பாக, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முத்துகுமாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பிரேதப் பரிசோதனையில், “முத்துகுமாரின் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, அவரது மனைவியிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். தொடக்கத்தில், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தார். ஆனால், போலீசாரின் கிடிக்குப்பிடி விசாரணையில், “கள்ளக் காதல் காரணமாக, கணவனை கொலை செய்ததை” அவர் ஒப்புக்கொண்டார். 

இதனையடுத்து, இருவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். கைதான சுந்தர், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொலை சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.