தென் தமிழகத்தில் அடுத்த 2 வாரங்களில் இயல்பை விட கூடுதலாக பருவமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் வட தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் இன்று சேலம், ஈரோடு, நீலகிரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 
மேலும் நாளை சனிக்கிழமை அன்று சேலம், தருமபுரி, நாமக்கல், ஈரோடு, கடலூர் மற்றூம் டெல்டா மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

r1

இதேபோல் நாளை மறுநாள் ஞாயிற்றுகிழமை அன்று சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 

இதுமட்டுமின்றி மத்திய கிழக்கு அரபிக்கடல், கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசுவதால், அந்தப் பகுதிகளுக்கு மூன்று நாட்களுக்கு மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் சென்னை வானிலை மையத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில், பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வெப்பநிலை அதிகபட்சமாக 29 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

தற்போது பெய்துவரும் மழையால், நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் அதிகபட்சமாக 13 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் 9 சென்டி மீட்டர் மழையும், பாளையங்கோட்டையில் 8 சென்டி மீட்டர் மழையும், கன்னியாகுமரி மாவட்டத்தின் பெருஞ்சாணி அணையில் 7 சென்டி மீட்டர் மழையும், நெல்லை நாங்குநேரியில் 7 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

R2

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் மருதங்கோடு பகுதியில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில், 15-க்கும் மேற்பட்ட வீடுகளின் மதில் சுவர்கள் இழுத்துச் செல்லப்பட்டன. அப்பகுதியில், இதுபோன்று காட்டாற்று வெள்ளத்தை கண்டதில்லை என்று பொதுமக்கள் கூறும் அளவிற்கு அதன் தாக்கம் இருந்தது.

வடகிழக்கு பருவமழையால், மாநிலம் முழுவதும் உள்ள நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.  இந்தநிலையில்  தெற்கு மற்றும் உள் தமிழகத்தைச் சேர்ந்த மாவட்டங்களில் அடுத்த இரண்டு வாரம் இயல்பை விட கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

வடகிழக்கு பருவமழையின் தீவிரம் அடுத்த சில நாட்களில் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முதல், கடந்த நம்பவர் இரண்டாம் தேதி வரையிலான காலத்தில் 42 சதவீதம் மழை கூடுதலாக பெய்துள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.