பதறிபோய் ட்வீட் செய்த கௌதம் மேனன்… தர்மசங்கடத்தில் இயக்குநர் பா.ரஞ்சித்… அன்புசெல்வன் திரைப்பட பி.ஆர்.ஓ. விளக்கம்!
‘அன்புசெல்வன்' என்கிற திரைப்படத்தில், இயக்குநர் கெளதம் மேனன் நடிப்பதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட, ஆனால் அந்தப் படத்தில் தான் நடிக்கவில்லை என கௌதம் மேனன் மறுத்துள்ள நிலையில், இந்த திரைப்படத்தின் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
தமிழ் திரையுலகில் காதல் கதைகளை வித்தியாசமான முறையில் இயக்கி, இளைஞர்களை கவர்ந்து வைத்திருப்பவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களை காதலை அழகியலுடன் இயக்கியிருப்பார். இதனால் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
அண்மை காலமாக இயக்கம் மட்டுமின்றி, தயாரிப்பு மற்றும் நடிப்பிலும் கௌதம் வாசுதேவ் மேனன் கவனம் செலுத்தி வருகிறார். இந்தநிலையில், சமூக வலைதளங்களில் இன்று காலை முதல், இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் நாயகனாக நடிக்கும் ‘அன்புசெல்வன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக இருப்பதாக விளம்பரப்படுத்தப்பட்டது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் விஷ்ணு விஷால் உள்ளிட்ட பிரபலங்கள் வெளியிடுவார்கள் எனவும் கூறப்பட்டது.
அதன்படி இயக்குநர் பா. ரஞ்சித் 'அன்புசெல்வன்' என்று பெயரிடப்பட்ட திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டரில் வெளியிட்டார். கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'காக்க காக்க' படத்தில் சூர்யா கதாபாத்திரத்தின் பெயர் அன்புசெல்வன். அந்தப் பெயரில் படம் என்பதால், கெளதம் மேனனுக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள்.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் போலீஸ் அதிகாரியாக கௌதம் மேனன் இருந்ததால்‘ காக்க காக்க’ 2-ம் பாகமோ என்று தோன்றும் அளவுக்கு போஸ்டர் இருந்தது. இதனைப் பார்த்து உடனடியாக இயக்குநர் கெளதம் மேனன் செய்த ட்வீட், பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஏனெனில் இது என்ன படமென்று எனக்குத் தெரியாது என்று தெரிவித்துள்ளார் கெளதம் மேனன்.
'அன்புசெல்வன்' திரைப்படம் தொடர்பாக கெளதம் மேனன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ‘இது எனக்கு அதிர்ச்சியான செய்தியாக இருக்கிறது. நான் நடிப்பதாகக் கூறப்படும் இந்தப் படம் பற்றி என்று எதுவும் தெரியாது. இந்த போஸ்டரில் பெயர் போட்டிருக்கும் இயக்குநரை எனக்குத் தெரியாது. அவரை நான் சந்திக்கவும் இல்லை. தயாரிப்பாளருக்கு இதை ட்வீட் செய்ய பிரபலமான பெயர்கள் கிடைத்துள்ளன. இது போன்ற ஒன்றை மிக எளிதாகச் செய்ய முடியும் என்பது அதிர்ச்சியாகவும் பயமாகவும் இருக்கிறது’ என்று கெளதம் மேனன் அந்த ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
This is shocking & news to me.I have no idea what this film is that I’m supposed to be acting in.I don’t know or haven’t met the director whose name is on this poster.Producer has got big names to tweet this. It’s shocking & scary that something like this can be done so easily. https://t.co/CnMaB3Qo90
— Gauthamvasudevmenon (@menongautham) November 3, 2021
கௌதம் மேனனின் ட்வீட்டை தொடர்ந்து, இயக்குநர் பா.ரஞ்சித் அந்த போஸ்டை தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கி உள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக ரசிகர்களிடையே குழப்பம் நிலவியது. இந்தநிலையில் ‘அன்புசெல்வன்’திரைப்படத்தின் மக்கள் தொடர்பு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது, பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களே, இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் உருவாகும் ‘அன்புசெல்வன்’படத்தின் முதல் பார்வை விவகாரம் குறித்த விளக்கம்:
‘தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராகவும், தனது படைப்புகள் மூலம் சமூக பிரச்சனைகளை தொடர்ந்து பேசி வருபவருமான பா. ரஞ்சித் அவர்கள், வளரும் கலைஞர்களை ஊக்குவிப்பதில் என்றுமே தவறியதில்லை. அந்த வகையில், வளரும் மக்கள் தொடர்பாளர்களான சுரேஷ் சுகு மற்றும் தர்மதுரை ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்கள் பணியாற்றும் ‘அன்புசெல்வன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
ஆனால், அப்படக்குழுவினருக்கு இடையே உள்ள சில பிரச்சனைகள் காரணமாக, இயக்குநர் கெளதம் மேனன் ஒரு அதிர்ச்சியான பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இயக்குநர் கெளதம் மேனனின் டிவிட்டர் பதிவு குறித்து, இயக்குநர் பா. ரஞ்சித்திடம் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். வளரும் கலைஞர்களுக்கு உதவும் நோக்கத்தில் இயக்குநர் பா. ரஞ்சித் செய்த இந்த செயல் தற்போது அவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், பா.ரஞ்சித் அவர்களுக்கும், இதற்கும் எந்த வகையிலும் சம்பந்தம் இல்லை என்பதைத் தெளிவுப்படுத்த விரும்புகிறோம். இந்தப் படத்தின் PR பணிகளைக் கையாளும் சுரேஷ் மற்றும் தர்மதுரை ஆகியோரை ஊக்குவிக்கும் வகையில் ஃபர்ஸ்ட் லுக்கை அவர் வெளியிட்டார். எனவே, இனி ‘அன்புசெல்வன்’ ஃபர்ஸ்ட் லுக் விவகாரம் தொடர்பாக, இயக்குநர் பா. ரஞ்சித் அவர்களது பெயரை சேர்க்க வேண்டாம், என்று தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம். அதே சமயம், வளர்ந்து வரும் எங்களுக்கு கைகொடுக்க நினைத்து உதவிய இயக்குநர் பா. ரஞ்சித்துக்கு எங்களால் இப்படி ஒரு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டதற்காக, நாங்களும், ‘அன்புசெல்வன்’ படக்குழுவினரும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.
செவண்டி எம்.எம். ஸ்டுடியோவின் தயாரிப்பாளர் எம்.மகேஷ், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலையீட்டின் மூலம் இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண்பார் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம். கவுதம் வாசுதேவ் மேனன் சாரின் எபிசோடுகள் அடங்கிய இந்த படத்தின் முதல் ஷெட்யூல் ஏற்கனவே முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது சினிமா ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், ‘அன்புசெல்வன்’ திரைப்படத்தில் இயக்குநர் கெளதம் மேனன் நடித்ததாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.