ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஆப்கனை எளிதாக வென்றது இந்தியா

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், சூப்பர் 12 சுற்றின் குரூப் 2 ல் இடம் பெற்றுள்ள இந்திய அணியானது, ஆப்கானிஸ்தான் அணியுடக் நேற்று மோதின. 

இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுலும், ரோஹித் சர்மாவும் களம் இறங்கினர். 

அவர்கள் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். கடந்த 2 போட்டிகளில் கே.எல்.ராகுலும், ரோஹித் சர்மாவும் சிறப்பான தொடக்கத்தைக் கொடுக்காத நிலையில், நேற்றைய போட்டியியல் அதரடி கிளப்பினர்.

அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 37 பந்திலும், ராகுல் 35 பந்திலும் அரை சதம் அடித்து அசத்தினர். இருவரும், முதல் விக்கெட்டுக்கு 14.3 ஓவரில் 140 ரன்கள் சேர்த்தனர். ரோகித் சர்மா 47 பந்துகளில்  8 பவுண்டரி, 3 சிக்சர் என மொத்தம் 74 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

ராகுல் 48 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சர் என  69 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதனால், கடைசி கட்டத்தில் ரிஷப் பன்ட், ஹர்திக் பாண்டிய ஜோடி அதிரடி காட்ட இந்திய அணி 20 ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 210 ரன் குவித்தது. 

அப்போது, ரிஷப் பன்ட் 13 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர் என 27 ரன்களுடனும், ஹர்திக் பாண்டியா 13 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர் என 35 ரன்னுடனம்  ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

இதனையடுத்து, 211 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி போராடி விளையாடிய நிலையிலும், எளிதில் தோல்வியை ஒப்புக் கொண்டது. 

அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 144  ரன் எடுத்து தோல்வி அடைந்தது. அந்த அணியில் அதிக பட்சமாக கரிம் ஜனத் ஆட்டமிழக்காமல் 42 ரன்னும், கேப்டன் நபி 35 ரன்னும் எடுத்தனர். 

இந்திய பந்துவீச்சில் முகமது ஷமி 3 விக்கெட்டும், அஷ்வின் 2 விக்கெட்டும், பும்ரா, ஜடேஜா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.  அதிரடியாக விளையாடி 74 ரன்களை எடுத்த ரோஹித் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

இந்த வெற்றியின் மூலம் உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டத்தில், இந்திய அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்து உள்ளது.

குறிப்பாக, இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது மட்டுமில்லாமல், நெட் ரன்ரேட்டையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.