தீபாவளி பண்டிகையையொட்டி இரவு நேரத்தில் அதிகளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், தமிழகம் முழுவதும் உள்ள நகரங்களில் காற்றின் மாசுபாடு அதிகரித்திருக்கும் நிலையில், சென்னையில் காற்றின் மாசு மிக அதிக அளவில் அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது.

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

சென்னை உட்பட தமிழகத்தின் சில பகுதிகளில் நேற்றைய தினம் பரவலாக மழை பெய்த போதிலும் தீபாவளி பண்டிகை உற்சாகமாகப் பட்டாசுகள் வெடித்து கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 

அத்துடன், தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும்,  மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசுகள் வெடிக்கத் தமிழக அரசு அனுமதி வழங்கி இருந்தது.  இதனால், பொது மக்கள் வெடி வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது, வான வேடிக்கையால்  சென்னை நகரமே வண்ணமயமாகக் காட்சி அளித்தது.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி பல்வேறு இடங்கள் புகை மண்டலமாகக் காட்சி அளித்தது.  இதன் மூலம் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் மாசு அளவு 150 என்ற குறியீட்டைத் தாண்டி உள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 

இதில், சென்னையிலேயே மிக அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் காற்றின் தரக் குறியீடு 181 ஆக பதிவாகி உள்ளது. 

இதற்கு அடுத்த படியாக, அரும்பாக்கத்தில் 176, வண்டலூரில் 125, போரூரில் 122, மணலியில் 154 என காற்றின் தரக் குறியீடு பதிவாகி உள்ளது.

இந்த அளவு குறியீடானது, மனிதர்கள் சுவாசிப்பதற்கான ஆரோக்கியமான காற்று இல்லை எனவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. 

மேலும், “காற்றில் கலந்து இருக்கும் துகள்களின் எண்ணிக்கை அடிப்படையில் காட்சி தரக் குறியீடு என்பது கணக்கிடப்பட்டு உள்ளதாகவும்” மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது.

அதன்படி, “0 முதல் 50 வரை இருப்பது ஆரோக்கியமானது என்றும், 51 முதல் 100 வரை இருப்பது மிதமான காற்றைச் சுவாசிக்க ஏதுவானது என்றும், 101 முதல் 150 வரை உடல் நல குறைவு ஏற்படும்” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

“சுவாச பிரச்சனை உள்ளவர்கள் சுவாசிக்கக் காற்று அல்ல என்றும், 151 முதல் 200 ஆரோக்கியமற்ற காற்று” என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 

குறிப்பாக, “நேற்று தீபாவளி பண்டிகையின் போது, ஒரே நாளில் இயல்பை விட  20 மடங்கு காற்று மாசடைந்துள்ளது என்றும்,  இது படிப்படியாகக் குறையும் என்றும்” மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது.

அதே போல், தலைநகர் டெல்லியில் பல மாதங்களாகக் காற்றின் தரம் மிகவும் மோசமான அளவில் இருந்த வந்த நிலையில், தீபாவளி பண்டிகையால் வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் அங்கு அதிக அளவில் அதுவும் அபாயகர அளவை தாண்டி காற்று மாசு காணப்படுகிறது.

இதனிடையே, அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பட்டாசு வெடித்ததாகத் தமிழகம் முழுவதும் 2372 வழங்கிகள் பதிவு செய்யப்பட்டுள்ள உள்ளன. இதில், சென்னையில் மட்டும் 758 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.