பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை அன்று, கமுதி அருகே போலீசாரின் வாகனங்களின் மீது அத்து மீறி ஏறி நடனமாடிய 3 கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் 59 வது குரு பூஜை விழா மற்றும் 114 வது ஜெயந்தி விழா யாகசாலை பூஜையுடன் கடந்த 28 ஆம் தேதி நடைபெற்றது. 

இந்த விசேச பூஜையுடன் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ள இருப்பவர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி வாகன சீட்டு பெற வேண்டும் என்றும், அதை கண்ணாடியின் முன்பு நன்கு தெரியும் இடத்தில் ஒட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு இருந்தது. 

அத்துடன், அங்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட எந்த ஒரு வன்முறையும் ஏற்படாத வகையில், அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவும் விதிக்கப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக, ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் ஆலயத்தில் கடந்த 28 ஆம் தேதி இன்று காலை பிள்ளையாா் பட்டி குருக்களின் யாகசாலை பூஜையுடன் முத்துராமலிங்கத்தேவரின் 59 வது குருபூஜை விழா நடைபெற்றது.

அப்போது, போலீசாரின் தடையை மீறி வெளி மாவட்ட மற்றும் ராமநாதபுரம் மாவட்ட பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சிலர், தேவர் குருபூஜைக்கு அங்கு அத்து மீறி வருகை தந்தனர். 

முக்கியமாக அத்து மீறி வந்த இளைஞர்கள், அங்கிருந்த வட்டாட்சியர் வாகனம், போலீசார் வாகனங்களில் முன்பாக மறைத்து வாகனத்தின் மேற்கூரையில் ஏறி ஆட்டம் போட்டு, அவற்றை அவர்கள் வீடியோவாகவும் எடுத்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். 

இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தின. 

இதனால், போலீசாரின் வாகனத்தின் மீது ஏறி குத்தாட்டாம் போட்ட அந்த இளைஞர்களின் வீடியோ வைரலான நிலையில், இது பொது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால், சம்மந்தப்பட்டவர்களைக் கைது செய்ய வேண்டும் என்கிற கண்டன குரல்களும் எழுந்தன.

இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், இந்த சம்பவமானது, “கமுதி மின் வாரியம் அலுவலகத்திற்கும், பசும்பொன் தேவர் நினைவிடத்திற்குச் செல்லும் நுழைவு வாயிலுக்கு இடையில் நடைபெற்றது” என்பதனை கண்டுபிடித்தனர்.

குறிப்பாக, அரசு வாகனத்தில் ஏறியது மட்டுமன்றி, கடந்த 28 ஆம் தேதி போலீஸ் வாகனமொன்றின் பின்பக்க கண்ணாடியைத் தேவர் குருபூஜைக்கு வந்த அடையாளம் தெரியாத இளைஞர்கள் சேதப்படுத்தியதாகவும், அதனைத் தொடர்ந்து 29 ஆம் தேதி வட்டாட்சியர் வாகனம், காவல் வாகனங்களின் மேற்கூரையில் ஏறி குத்து ஆட்டம் போட்டுள்ளதும் போலீசாருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், அந்த பகுதியில், 144 தடையை மீறி இருசக்கர வாகனத்தில் வந்து அசுர வேகத்தில் சாலையில் பசும்பொன் இருக்கும் கமுதிக்கும் அடையாளம் தெரியாத இளைஞர்கள் சிலர், அந்த வழியாக வந்து பெண்கள் உள்ளிட்ட பொது மக்களை அச்சுறுத்தி உள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. 

அப்போது, அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்புக்காக இருந்தாலும் இளைஞர்கள் செய்யும் அட்டூழியத்தைக் கண்டும் காணாமலும் இருந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து அப்போதே விளக்கம் அளித்த போலீசார், “தேவர் குருபூஜை விழா எந்த ஒரு பிரச்சினை இல்லாமல் நடைபெற்று வருவதால், ஒரு சில இளைஞர்கள் செய்யும் அட்டூழியத்தை தற்போதைக்கு கண்டும் காணாமல் இருக்கிறோம் என்றும், விழா முடிந்தவுடன் சம்மந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், சில அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தான், கடந்த 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வந்த இளைஞர்கள்  அரசுத்துறை வாகனம், பேருந்துகளின் மீது ஏறி ஆட்டம் போட்ட  வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அதனையே ஆதாரமாக எடுத்துக்கொண்டு, கமுதி போலீசார் cctv கேமராவில் பதிவான காட்சிகளை வைத்துக்கொண்டும், போலீசாரின் வாகனம் மீது நடனம் ஆடிய கல்லூரி மாணவர்கள் அஜய்குமார், கருப்புசாமி, வாசு ஆகிய 3 பேரும், அவர்களோடு ஆட்டம் போட்ட காளீஸ்வரன், ரஞ்சித் குமார் உள்ளிட்ட மொத்தம் 5 பேரை கமுதி போலீசார் தற்போது அதிரடியாகக் கைது செய்தனர்.

இந்த 5 பேரிடமும் தனிப்பட்ட முறையில் போலீசார் விசேசமாக விசாரணை நடத்திய போலீசார், அந்த 5 பேரையும் சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.