ஸ்காட்லாந்து கிளாஸ்கோ பருவநிலை மாற்ற மாநாட்டில், காலநிலை மாற்றம் தொடர்பாக உலகத் தலைவர்கள் வெறும் பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதாக, தமிழகத்தை சேர்ந்த வினிஷா உமாசங்கர், இளவரசர் வில்லியம் முன்னிலையில் விளாசித் தள்ளியுள்ளார். 

தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் 14  வயதான வினிஷா உமாசங்கர். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க சூரிய மின்சக்தியில் இயங்கும், தெருவோர இஸ்திரி வண்டியை  உருவாக்கி கவனம் பெற்றவர் வினிஷா உமாசங்கர். பருவநிலை மாற்றத்தில் சூற்றுச்சூழலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் முன்னெடுப்பு எடுப்பவர்களுக்கு இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் அறக்கட்டளை சார்பில் விருது வழங்கப்படுகிறது.

அந்தவகையில் இளவரசர் வில்லியமின் அறக்கட்டளை வழங்கும் எர்த் ஷாட் விருதின் இறுதி சுற்றுக்கு தகுதிபெற்றவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த வினிஷா உமாசங்கரும் ஒருவர்.  இதையடுத்து, மாநாட்டில்  தூய்மை தொழில்நுட்பம் குறித்து  பேச, வினிஷாவுக்கு, இளவரசர் வில்லியம் அழைப்பு விடுத்திருந்தார். 

v1

அதன் பேரில் COP26 climate summit மாநாட்டில் பேசிய வினிஷா கூறியதாவது, ‘எனது தலைமுறையினர் கடும் கோபத்துடனும், விரக்தியுடனும் இருக்கிறோம். பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே உலகத் தலைவர்கள் அளிக்கிறார்கள். இது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது. இந்த பூமியை தயவு செய்து காப்பாற்றுங்கள். அதற்காக ஆக்கப்பூர்வமாக பாடுபடுங்கள்.

இன்று நான் உங்கள் அனைவரிடமும் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன். பேசுவதை நிறுத்திவிட்டு செயலில் ஈடுபடத் தொடங்குங்கள். புதைபடிவ எரிபொருள்கள், புகை மற்றும் மாசுபாடு ஆகியவற்றில் கட்டமைக்கப்பட்ட பொருளாதாரத்தை ஆதரிக்க கூடாது. இதற்கு பதிலாக எர்த்ஷாட் பரிசு வென்றவர்கள் மற்றும் இறுதிப் போட்டியாளர்களான  எங்களின் கண்டுபிடிப்புகள், திட்டங்கள் மற்றும் தீர்வுகளை நீங்கள் ஆதரிக்க வேண்டும்.  பழைய விவாதங்களைப் பற்றி சிந்திப்பதை நிறுத்த வேண்டும். ஏனென்றால் புதிய எதிர்காலத்திற்கான புதிய பார்வை நமக்குத் தேவை. 

எனவே எங்களுடைய எதிர்காலத்தை வடிவமைக்க உங்கள் நேரத்தையும், பணத்தையும், முயற்சியையும் எங்களிடம் முதலீடு செய்ய வேண்டும். எங்களுடன் சேர உங்களை அழைக்கும்போது, நீங்கள் இல்லாவிட்டாலும் நாங்களே வழிநடத்துவோம். தாமதித்தாலும் நடவடிக்கை எடுப்போம். நீங்கள் கடந்த காலத்தில் சிக்கிக்கொண்டாலும், எதிர்காலத்தை நாங்கள் உருவாக்குவோம். ஆனால் தயவுசெய்து எனது அழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

v2

எனது தலைமுறையில் பலர் வெற்று வாக்குறுதிகளை அளித்து நிறைவேற்றத் தவறிய தலைவர்கள் மீது கோபமும், விரக்தியும் அடைந்துள்ளனர். மேலும் நாங்கள் கோபப்படுவதற்கு எல்லா காரணங்களும் உள்ளன. ஆனால் எனக்கு கோபம் கொள்ள நேரமில்லை. எனக்கு செயல்பாடு முக்கியது. நான் இந்தியாவைச் சேர்ந்த பெண் மட்டுமல்ல. பூமியைச் சேர்ந்த பெண்ணும் தான்.  நான் அப்படி இருப்பதில் பெருமைப்படுகிறேன்’என்று பேசினார். 

சிறுமி வினிஷா உமாசங்கர் கலந்துகொண்ட கிளாஸ்கோ நகரில் நடந்த பருவநிலை மாநாட்டில், காடுகள் மற்றும் நிலம் பயன்பாடு தொடர்பாக இங்கிலாந்து ஏற்பாட்டில் தனி அமர்வு நடைபெற்றது. அதில், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் முன்னிலையில்தான் தமிழகத்தை சேர்ந்த வினிஷா, வெளுத்து வாங்கி பேசினார். 

இதில், 2030-ம் ஆண்டுக்குள் காடுகள் அழிப்பு மற்றும் நிலம் சீரழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க தலைவர்கள் உறுதி எடுத்துக்கொண்டனர். இதுதொடர்பான பிரகடனத்தில் சீனா, பிரேசில் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டன.  சுவீடன் நாட்டைச் சேர்ந்த, உலகின் பருவநிலை காக்க போராடும் 15 வயதேயான பெண் கிரேட்டா தன்பெர்க் போன்று, துணிச்சலாக தனது கருத்தை, வினிஷா உமாசங்கர் எடுத்து வைத்துள்ளார்.