அரசுப் பேருந்து மீது சரக்கு லாலி மோதியதில், பேருந்து அருகில் இருந்த கடையின் மீது கவிழ்ந்து விழுந்ததில் 8 பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் தான் இப்படி ஒரு கோர விபத்து அரங்கேறி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவை மாவட்டம் மேட்டுப் பாளையத்தில் இருந்து, அரசுப் பேருந்து ஒன்று இன்று காலை சத்தியமங்கலம் நோக்கி சென்று உள்ளது. 
அப்போது, அந்த அரசுப் பேருந்தானது சுமார் 20 பயணிகளுடன், அங்குள்ள சிறுமுகை சாலையில் சென்று கொண்டிருந்தது. 

அப்போது, அந்த பகுதியில் உள்ள ஆலாங்கொம்பு என்னுமிடத்தில் உள்ள 3 ரோடுகள் சந்திக்கும் பகுதியில், இந்த அரசுப் பேருந்து மெதுவான வேகத்துடன் கடந்து சென்றுக்கொண்டிருந்த போது, அந்த பகுதியின் மற்றொரு ரோட்டின் வழியாக வந்த சரக்கு லாரி ஒன்று, அரசுப் பேருந்து வந்த முக்கிய சாலையில் வந்த வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக திரும்பி உள்ளது.

அப்போது, அந்த 3 ரோட்டின் சந்திப்பில் அந்த அரசுப் பேருந்து கடந்துகொண்டிருந்த நிலையில், வேகமாக வந்த சரக்கு லாரி, வந்த வேகத்தில் அரசுப் பேருந்து மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதி உள்ளது.

பேருந்து மீது சரக்கு லாரி மோதிய வேகத்தில், அரசு பேருந்து நிலை தடுமாறி அருகில் இருந்த கடையின் மீது அப்படியே கவிழ்ந்தது.

கண் இமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த பயங்கர கோர விபத்தில், பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உள்பட மொத்தம் 8 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பி உள்ளனர்.

அத்துடன், அந்த சரக்கு லாரி மோதிய வேகத்தில், அந்த அரசு பேருந்து அருகில் இருந்த கடைகள் மீது சாய்ந்ததில், அந்த நேரத்தில் அந்த கடையில் இருந்தவரின் நிலை குறித்து இன்னும் சரிவர தெரியவில்லை.

ஆனால், விபத்து ஏற்பட்ட நேரத்தில் அந்த சாலையில் யாரேனும் நடந்து சென்றிந்தாலோ அல்லது கடைகளின் முன்புறம் யாரேனும் நின்றிந்தாலோ அவர்கள் உயிரிழந்திருப்பார்கள் என்றும், ஆனால் நல்வாய்ப்பாக அப்படி எதுவும் நிகழவில்லை. அதற்கு மாறாக, இந்த பேருந்து விபத்தில் பயணம் செய்த 8 பேர் மட்டும் படுகாயங்களுடன் உயிர் தப்பி உள்ளனர்.

படுகாயம் அடைந்த 8 பேரும், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், இந்த விபத்து காரணமாக போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அத்துடன், விபத்து காரணமாக அங்குள்ள சிறுமுகை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், அடுத்த சில மணி நேரத்தில் மீட்பு வாகனம் கொண்டு வரப்பட்டு சாலையில் நின்றிருந்த சரக்கு லாரி மற்றும் கவிழ்ந்து கிடந்த அரசுப் பேருந்தை அகற்றும் பணிகளும் நடைபெற்றன. இந்த பேருந்து விபத்தால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.