தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் காமெடியனாக திகழும் வைகைப்புயல் வடிவேலு அவர்கள் தனக்கே உரித்தான உடல் மொழி, வசன உச்சரிப்பு, கொண்ட தனது நகைச்சுவையால் ரசிகர்களின் மனதை ஆட்சி செய்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளார் வடிவேலு அடுத்தடுத்து அதிரடி நகைச்சுவை திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

முன்னதாக இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் வைகைப்புயல். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். சமீபத்தில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இதனிடையே நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் பாடல் வேலைகளுக்காக படக்குழுவினர் லண்டன் சென்றிருந்தனர். இதையடுத்து சென்னை திரும்பிய வைகைப்புயல் வடிவேலுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சென்னையின் போரூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் வடிவெலு.

இந்நிலையில் வடிவேலுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைகைப்புயல் வடிவேலு வெகு விரைவில் பூரண குணமடைந்து மீண்டு வர கலாட்டா குடும்பம் சார்பாக வேண்டிக்கொள்கிறோம்.