கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பா.ஜ.க சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய  பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர்  கல்யாணராமன், நபிகள் நாயகம் பற்றி இழிவாகப் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டையொட்டி, அவரை கைது செய்ய வேண்டும் என்று முஸ்லிம் அமைப்பினர் ஆர்பாட்டம் நடத்தினர். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கல்யாணராமனைக் கைது செய்ய கோரி போராட்டம் நடைபெற்றது.


இதன்பிறகு கல்யாண ராமன் உள்ளிட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து செய்தனர். மேலும் கல்யாண ராமன் மீது 147, 148, 504, 506(2), 153(பி), 269 ஆகிய பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


கல்யாண்ராமன் கைது பற்றி பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பதிவில், ‘பா.ஜ.க தேசியமும் ஆன்மீகமும் கொள்கை என்று கொண்டுள்ளது. பாஜக என்றும் மதம் சார்ந்த அரசியல் செய்யாது. மாற்று மதத்தினரின் இறை நம்பிக்கையை இழிவுபடுத்துகின்ற கட்சி பாஜக கிடையாது. முஹம்மது நபி(ஸல்) அவர்களை பற்றி யார் தவறாக பேசியிருந்தாலும் அது கண்டிக்கதக்கது’ என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும் , ஹெச்.ராஜா கல்யாணராமன் கைதுக்கு கண்டனம் தெரிவித்து, ‘’ஆண்டாள் நாச்சியாரை அருவருக்கத்தக்க விதத்தில் விமர்சித்த இந்துவிரோதி வைரமுத்துவை கைது செய்யாத காவல்துறை கல்யாணராமனை கைது செய்துள்ளது பாரபட்சமானது. கண்டிக்கத் தக்கது’ என்று பதிவிட்டுள்ளார்.