பொதுவாக நல்லி எலும்பு சாப்பிடுவது என்று சொன்னால் அனைவருக்கும் நியாபகம் வரும் நடிகர் ராஜ்கிரண் தான். திரையுலகில் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பணிபுரிந்திருக்கிறார். அரண்மனைக்கிளி, என்ன பெத்த ராசா, நந்தா, சண்டக்கோழி, பாண்டவர் பூமி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

சினிமா உலகில் விஜய்காந்த் தான் எல்லா படத்திலும் ஹீரோவாகவே நடித்தார். எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் கவர்ச்சி வேடத்தில் நடிக்க மாட்டேன் என்ற பாலிசியை கடைபிடித்தார் ரேவதி. அதுபோல் எந்த சமயத்திலும் வில்லனாக நடிப்பதில்லை என்ற பாலிசியுடன் இருப்பவர் ராஜ்கிரண், சில்வர் ஜுப்ளி படத்தில் நடித்த ராஜ்கிரணுக்கு ஒரு கட்டத்தில் படம் இல்லாத நிலை ஏற்பட்டது அப்போது ஷங்கரிடமிருந்து அழைப்பு வந்தது. ரஜினிகாந்த் நடிக்கும் சிவாஜி படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க கேட்டார். ஆனால் வில்லன் வேடத்தில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார். 

1991-ஆம் ஆண்டு ராஜ்கிரண் தயாரிப்பில் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் நடிகர் ராஜ்கிரண் - மீனா ஆகியோர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் என் ராசாவின் மனசிலே. படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் தான் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை ராஜ்கிரண் அறிமுகப்படுத்தினார். நடிகர் ராஜ்கிரணின் சினிமா வாழ்க்கையிலும், நல்ல சினிமா ரசிகர்களின் ரசனையிலும் நீங்கா இடம் பிடித்த படம் இது. 

தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை ராஜ்கிரனின் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது இயக்க இருக்கிறார். இது குறித்து நடிகர் ராஜ்கிரன் வெளியிட்டுள்ள செய்தி: இறை அருளால், இன்று, என் மகனார் திப்பு சுல்தான் நைனார் முஹம்மதுவின் இருபதாவது பிறந்த நாள்... என் ராசாவின் மனசிலே இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்து விட்டு, திரைக்கதையை எழுதிக்கொண்டிருக்கிறார்... அவரே படத்தை இயக்கவும் உள்ளார். அவர் மிகப்பெரும் வெற்றிப் பட இயக்குனராக, உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறேன். இவ்வாறு ராஜ்கிரண் கூறியுள்ளார். 

2017-ம் ஆண்டு தனுஷ் இயக்கத்தில் பவர் பாண்டி படத்தில் நடித்திருந்தார். அதன் பின் விஷாலுடன் சண்டக்கோழி 2 படத்தில் நடித்தார். கடந்த ஆண்டு மம்முட்டி நடித்த ஷைலாக் என்ற மலையாள படத்தில் நடித்து மலையாள திரையுலகில் கால் பதித்தார்.