வைபவ், பார்வதி நாயர் நடிக்கும் படம், ஆலம்பனா. இதை, அறிமுக இயக்குனர் பாரி கே.விஜய் இயக்குகிறார். இவர், முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை ஆகிய படங்களில் துணை மற்றும் இணை இயக்குனராக பணியாற்றியவர். இந்தப் படத்தில் திண்டுக்கல் ஐ.லியோனி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ஆனந்த்ராஜ், முரளி சர்மா, கபீர் சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மைசூர் அரண்மனை, சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கியுள்ளனர். ஃபேன்டஸி கான்செப்ட் படம் என்பதால் படக்குழுவினர் மிகவும் சிரத்துடன் உருவாக்கியுள்ளனர்.

வைபவ் நடித்துள்ள படங்களில், இதுதான் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதையடுத்து படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். கிராஃபிக்ஸ் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழுவினர் மும்முரமாக பணிபுரிந்து வருகிறார்கள்.

விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும், பாடல்களையும் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. ஹிப் ஹாப் ஆதி இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெய்ன் பிரமாண்டமான ஆக்‌ஷன் காட்சிகளை பிரத்யேகமாக வடிவமைத்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலில் இருந்து மீண்டு சகஜ நிலைக்குத் திரும்பியுள்ள மக்களை, சிரிப்பு மழையில் இந்த படம் நனைய வைக்கும் என்கிறது படக்குழு. குழந்தைகளை குஷிப்படுத்தும் படமாகவும் இது இருக்கும் என்று கூறுகிறார்கள். இதை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் சந்துரு இணைந்து தயாரிக்கின்றனர்.

வைபவ் கைவசம் காட்டேரி திரைப்படம் உள்ளது. இயக்குனர் டிகே இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், ஆத்மிகா, பொன்னம்பலம், கருணாகரன், சோனம் பாஜ்வா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்ட இந்தப் படம் ஓடிடி வெளியீட்டுப் பேச்சுவார்த்தையில் இருந்தது. அதன் பின் ஓடிடி வெளியீட்டிலிருந்து பின்வாங்கி திரையரங்க வெளியீட்டுக்கு மாறியது அனைவரும் அறிந்ததே.