உத்தரப் பிரதேசத்தில் 6 வயது சிறுமி ஒருவர், ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 6 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள அரசுப் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதால், அந்த சிறுமி தனது வீட்டில் இருந்து வந்தார். அத்துடன், அந்த சிறுமி, தனது சக தோழிகளுடன் சேர்ந்து அங்குள்ள ஒரு ஆசிரியரிடம் டியூசன் சென்று உள்ளார். அப்போது, சக மாணவிகள் அந்த ஆசிரியரிடம் டியூசன் படித்துக்கொண்டு இருக்கும் போது, குறிப்பிட்ட அந்த 6 வயது சிறுமியை மட்டும் தனியாகச் சொல்லித் தருவதாக அழைத்துச் சென்ற டியூசன் ஆசிரியர் தர்மேந்திர மௌரியா என்பவர், அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். 

இதனால், அந்த சிறுமியால் வலி தாங்க முடியாமல் அழுது கத்தி உள்ளார். இதனால், பயந்து போன டியூசன் ஆசிரியர் தர்மேந்திர மௌரியா, சிறுமியை விடுவித்து உள்ளார். அத்துடன், “இது தொடர்பாக யாரிடமும் எதுவும் கூற கூடாது” என்று, எச்சரித்து அனுப்பியதாகத் தெரிகிறது.

இதனையடுத்து, டியூசன் ஆசிரியர் வீ்ட்டிலிருந்து அழுது கொண்டே சிறுமி வீட்டிற்கு வந்து உள்ளார். அப்போது, வீட்டில் இருந்த சிறுமியின் பெற்றோர், “ஏன் அழுகிறாய்” என்று, கேட்டு உள்ளனர். அப்போது, சிறுது நேரம் எதுவும் பேசாமல் இருந்த சிறுமி, அதன் பிறகு, டியூசன் ஆசிரியர் தர்மேந்திர மௌரியாவின் பாலியல் வன்கொடுமை குறித்து கூறி, மீண்டும் அழுது உள்ளார். 

அத்துடன், டியூசன் ஆசிரியர் தர்மேந்திர மௌரியா பாலியல் வன்கொடுமை செய்யும் போது, தனது உடலில் ஏற்பட்ட சில காயங்களையும் அந்த சிறுமி பெற்றோரிடம் காட்டியதாகத் தெரிகிறது. இதனால், பதறிப்போன சிறுமியின் பெற்றோர், ஆசிரியர் தர்மேந்திர மௌரியா மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், டியூசன் ஆசிரியர் தர்மேந்திர மௌரியாவை கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை, அவர் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் முன்னிறுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியை, போலீசார் அங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அங்கு, சிறுமிக்குத் தொடர்ந்து சிகிச்கைள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, 6 வயது சிறுமியை டியூசன் ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம்,  உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே போல், ஹத்ராஸ் இளம் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை அலகாபாத் உயர் நீதிமன்றமே கண்காணிக்கும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.