தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவு செய்துள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக ஆளுநர் என்.ஆர்.ரவி, தமிழக அரசுடன் மோதல் போக்கை  கடைப்பிடித்து வருவதால், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக்கூட, அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல், தொடர்ந்து காலம் தாழ்த்தி, அரசியல் செய்து வருவதாக, தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இது தொடர்பாக, ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தமிழக ஆளுநர் என்.ஆர்.ரவியை, முரசொலி நாளிதழ் மிக கடுமையாக விமர்சனம் செய்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் தமிழக ஆளுநர் என்.ஆர்.ரவியை, முரசொலி நாளிதழ் மிக கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது.

இதனால், தமிழக அரசுக்கும் - ஆளுநர் என்.ஆர்.ரவிக்கும் உள்ள மோதல் போக்கு பட்டவத்தனமாக வெளியே தெரிய வந்தது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் டெல்லி அரசியல் வரை எதிரொலித்ததாக தகவல்கள் வெளியானது. 

குறிப்பாக, “நீட் தேர்வு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கவில்லை” என்ற காரணத்தால், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் ஆர்.என். ரவியின் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தை, தமிழக அரசு, திமுக கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் அதிரடியாக புறக்கணித்தன. 

இது தொடர்பாக, பாஜகவும் - திமுகவும் வெளிப்படையாகவே கருத்து யுத்தம் நடத்தியது. இதுவும், தமிழக அரசுக்கும் - ஆளுநர் என்.ஆர்.ரவிக்கும் உள்ள மோதல் போக்கை வெளிப்படையாகவே வெளிச்சம் போட்டு காட்டியது. இதனை டெல்லி மேடலிடம் கவனத்தில் எடுத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான், இந்த மோதலுக்கு மிக முக்கிய காரணமான, “தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைக்க” ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவு செய்துள்ளதாக, தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

“நீட் விலக்கு மசோதா தொடர்பான தமது பரிசீலனை மற்றும் குறிப்பேடு பணிகள் முடிவு பெற்றுள்ளதால், அதனை குடியரசுத் தலைவர் அனுப்பி வைக்க ஆளுநர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இது குறித்த விவரங்களை முறைப்படி முதலமைச்சரின் அலுவலகத்திற்கு தெரிவிக்க உள்ளதாகவும் புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

குறிப்பாக, நீட் தேர்வு மசோதாவை குடியரசுத் தலைவர் அனுப்பி வைப்பதால், ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் உள்ள மோதல் போக்கு சற்று குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால், இந்த முடிவை ஆளுநர் ரவி தற்போது எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வகை செய்யும் சட்ட மசோதா கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.