“ரஷ்யா -  உக்ரைன் போரால் 170 கோடி பேர் வறுமையில் தள்ளப்படுவார்கள்” என்று, ஐ.நா. பெரும் கவலை தெரிவித்து உள்ளது.

ரஷ்யா, உக்ரைன் மீது நடத்தி வரும் போர் இன்றுடன் 54 வது நாளாக நீடித்து வருகிறது. 

இப்படியாக, உக்ரைன் - ரஷ்யா இடையே நீடித்து வரும் இந்த போரால், ஐரோப்பிய கண்டத்தில் பெரும் பதற்றமான சூழலில் நிலவி வருகிறது.

அத்துடன், உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர், கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கிய நிலையில், இரு நாட்டிலும் பெரும் அளவில் உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த போரை நிறுத்த ஐ.நா. அமைப்பு, போப் பிரான்சிஸ், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் குரல் கொடுத்து வரும் நிலையில், ரஷ்யா மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளையும் விதித்து வருகின்றன. 

இது ஒரு புறம் இருந்தாலும், இன்னொரு புறம் இந்த போர் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த போரில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ஆயுத உதவியும் செய்து வருகின்றன.

என்றாலும், “உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி உள்ள ரஷ்ய படைகள், அங்கு பலவிதமான போர் குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாகவும்” குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன.

இந்த நிலையில் தான்,  “ரஷ்யா -  உக்ரைன் போரால் 170 கோடி பேர் வறுமையில் தள்ளப்படுவார்கள்” என்று, ஐ.நா. சபை தற்போது அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்து உள்ளது.

“இந்த போரால் மனித இனத்தில் 5 ல் ஒரு பங்கு சதவீதத்தினருக்கும் கூடுதலானோர் வறுமை மற்றும் பசியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்று, ஐ.நா. பொது செயலாளர் ஆன்டனியோ கட்டிரெஸ் கவலை தெரிவித்து உள்ளார்.

இது குறித்து ஊடகத்தில் பேசிய ஐ.நா. பொது செயலாளர் ஆன்டனியோ கட்டிரெஸ், “உக்ரைனில் கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ள சோகங்களை நாம் அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இந்த போரால், அந்நாட்டு எல்லைகளை கடந்து, வளர்ந்து வரும் நாடுகள் மீதும் மவுன தாக்குதல் தொடுக்கப்பட்டு உள்ளது” என்றும், அவர் கவலையுடன் குறிப்பிட்டு உள்ளார்.

“இந்த போரால், மனித இனத்தில் 5 ல் ஒரு பங்குக்கும் மேலான மக்கள் வறுமை மற்றும் பசி, பட்டினி நிலைக்கு தள்ளப்பட கூடும் என்றும், பல சந்தர்பங்களில் நாம் நினைத்துக்கூட பார்க்காத ஒரு நிலையை இந்த உலகம் எட்ட கூடும்” என்றும், அவர் மிகவும் கவலையுடன் தெரிவித்து உள்ளார்.

அத்துடன், “உலக அளவில், உக்ரைன் - ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் கோதுமை மற்றும் பார்லியை 30 சதவீதம் அளவுக்கு உற்பத்தி செய்கின்றன என்றும், ஆனால் 5 ல் ஒரு பங்கு சோளமும், பாதிக்கும் மேலாக சூரிய காந்தி எண்ணெயும் உற்பத்தி செய்யப்படுகிறது” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

“இப்படியாக, குறைந்த அளவில் வளர்ச்சி அடைந்த 45 நாடுகள், மூன்றில் ஒரு பங்கு கோதுமையை ரஷ்யா மற்றும் உக்ரைனிடம் இருந்து முழுமையாக இறக்குமதி செய்கின்றன என்றும், ஆனால் இந்த இரு நாடுகளின் போரால், உலகின் மற்ற நாடுகளில் தானிய ஏற்றுமதி அப்படியே தடைப்பட்டு உள்ளது” என்றும், கவலைத் தெரிவித்து உள்ளார். 

இவற்றுடன், “வினியோக சங்கிலியும் பாதிக்கப்பட்டு உள்ளது என்றும், இதனால் உலகின் பல நாடுகளிலும் இனி விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயரும்” என்றும், அவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார். 

மேலும், “நடப்பு 2022 ஆம் ஆண்டு தொடங்கியது முதல் கோதுமை - சோளம் ஆகியவற்றின் விலை 30 சதவீதம் உயர்ந்து உள்ளது” என்றும், அவர் கூறியுள்ளார்.

“கச்சா எண்ணெய் விலையும் 60 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்வடைந்து உள்ளது என்றும், எரிவாயு மற்றும் உரம் ஆகியவை இரு மடங்கிற்கும் கூடுதலாக விலையேற்றம் அடைந்து உள்ளது” என்றும்,  ஐ.நா. பொது செயலாளர் ஆன்டனியோ கட்டிரெஸ், பெரும் கவலை தெரிவித்து உள்ளார்.