தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் பிரபல நடிகர்களில் ஒருவரான நடிகர் சிபி சத்யராஜ் காவல்துறை அதிகாரியாக நடித்து கடைசியாக வெளிவந்த  க்ரைம் த்ரில்லர் திரைப்படங்களான வால்டர் மற்றும் கபடதாரி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து அதிரடி ஆக்ஷன் திரில்லர் திரைப்படங்களில் நடிகர் சிபி சத்யராஜ் நடித்து வருகிறார்.

அந்த வகையில் முன்னதாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் சிபி நடித்துள்ள ரங்கா திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. மேலும் இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கத்தில் வட்டம் திரைப்படத்திலும் சிபி நடித்துள்ளார். இந்த வரிசையில் சிபி சத்யராஜின் ஆக்ஷன் ஃபேன்டசி த்ரில்லர் திரைப்படமாக தயாராகியுள்ள திரைப்படம் மாயோன். 

டபுள் மீனிங் புரோடக்சன் சார்பில் தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி, தயாரித்துள்ள மாயோன் படத்தை, இயக்குனர் N.கிஷோர் இயக்கியுள்ளார். சிபி சத்யராஜ் உடன் இணைந்து தன்யா ரவிச்சந்திரன், கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி, ஹரிஷ் பெரடி ஆகியோர் மாயோன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ள மாயோன் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். முன்னதாக வெளியான மாயோன் படத்தின் டீசர் பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், மாயோன் திரைப்படம் வருகிற ஜூன் 17-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.