“அதிமுக பொதுக் குழுவில் இது தான் நடக்கும், இது நடக்காது என எந்த உத்தரவாதம் தர முடியாது” என்று, நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரே போடாக ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்ததுள்ளது, அக்கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோர கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் ஆகியோர் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் சற்று முன்னதாக விசாரணைக்கு வந்தது.

அதாவது, இந்த வழக்கானது, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி, இந்த வழக்கில் கூடுதல் மனுக்களை தாக்கல் செய்ய உள்ளதால், வழக்கை வரும் 22 ஆம் தேதி விசாரிக்க வேண்டும்” என்று, கோரிக்கை விடுத்தார். 

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கை இன்று விசாரிப்பதாக உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்றை தினம் சற்று முன்னதாக தொடங்கியது. 

சண்முகம் தரப்பு வாதம்

அப்போது, அதிமுக பொதுக் குழு உறுப்பினர் சண்முகம் சார்பில் முத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால் வாதத்தை தொடங்கினார். “பொதுக்குழு அலுவல் நிகழ்வு குறித்து அஜெண்டா இது வரை வெளியிடப்படவில்லை” என்றும் சண்முகம் தரப்பில் கூறப்பட்டது. 

அத்துடன், “ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக சட்ட விதிகளுக்கு எதிராக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது என்றும், பொதுச் செயலாளரின் அதிகாரங்களை இந்த இரு பதவிகளுக்கும் வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்” என்றும், வாதிடப்பட்டது. 

அதே போல், “கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த அதிமுக உள்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் புதிய நியமனங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்றும், தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. 

மேலும், “பொதுக் குழு மற்றும் செயற்குழுவை கூட்டுதல், கட்சி ஆட்சிமன்ற குழு அமைத்தல், உள்கட்சி தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியிடுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும்” உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வாதங்கள் அமைந்திருந்தன.

அப்போது, அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களின் நகல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வாதம்

அதில், 23 வரைவு தீர்மானங்களுடன் கட்சி அலுவலகத்தில் இருந்து இ மெயில் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது என்றும், அதற்கு எங்கள் தரப்பில் ஒப்புதல் கொடுக்கப்பட்டது என்றும், இந்த 23 வரைவு தீர்மானங்களை தவிர வேறு எந்த அஜெண்டாவையும் நாங்கள் அனுமதிக்க முடியாது” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டு விட்டது. கட்சி விதிகளுக்கு முரணாக செயல்பட மாட்டோம்” என்று நீதிமன்றத்தில், ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

எடப்பாடி தரப்பு வாதம்

அதன் தொடர்ச்சியாக, எடப்பாடி தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்ட போது, “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைபாளர்கள் இணைந்தே பொதுக் குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளனர்” என்று, குறிப்பிடப்பட்டது.

மேலும், “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைபாளரை விட, பொதுக்குழுவுக்கே அதிக அதிகாரம் இருக்கிறது என்றும், பொதுக்குழு தான் கட்சியின் உச்ச பட்ச அமைப்பு என்பது கட்சி விதியாக உள்ளது” என்றும், சுட்டிக்காட்டப்பட்டது.

“மாறாக, அதிமுக ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ அல்ல என்றும், பொதுக் குழுவிற்கான நோட்டீஸ் ஜூன் 2 ஆம் தேதியே கொடுக்கப்பட்டு உள்ளது என்றும், இது வரை பொதுக் குழு, செயற்குழு அஜெண்டாக்கள் வெளியிடப்பட்டது இல்லை” என்றும், வாதங்கள் முன்வைக்கப்பட்டன. 

“பொதுக் குழுவுக்கு விதிகளை திருத்தம் செய்ய அதிகாரம் உள்ளது என்றும், கொள்கைகளை உருவாக்குவது உள்ளிட்ட அனைத்திற்கும் பொதுக் குழுவுக்கே அதிகாரம் எந்த விதியையும் சேர்க்கவோ, நீக்கவோ 2665 உறுப்பினர்கள் கொண்ட பொதுக் குழுவால் முடியும் என்றும், பொது குழுவில் எந்த முடிவும் எடுக்கப்படலாம்” என்றும், அப்போது வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

குறிப்பாக, “பொதுக்குழுவில் இது நடக்கும், இது நடக்காது என உத்தரவாதம் தர முடியாது என்றும், பொதுக் குழுவில் பெரும்பான்மையினரின் கருத்துக்கு மதிப்பளிப்பதே ஜனநாயகம் என்றும், பொதுக் குழுவில் எந்த உறுப்பினரும் குரல் எழுப்பலாம்” என்றும்,  எடப்பாடி தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வாதம்

இதற்கு குறிக்கிட்ட ஓ.பன்னீர் செல்வம் தரப்பு, “எந்த உறுப்பினரும் பொதுக்குழு கூட்டத்தில் குரல் எழுப்பலாம் என்பதற்கான விதிகளை காட்டுங்கள் பார்ப்போம்” என்று, எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் சரமாரி கேள்வி எழுப்பினர்.

இப்படியாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்பினர் இடையே வாதங்கள் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.