நாளை நடக்க உள்ள அதிமுக பொதுக் குழுவில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பங்கேற்க முடிவு செய்து உள்ளதாக, வைத்திலிங்கம் தகவல் தெரிவித்து உள்ளார்.

நாளைய தினம் அதிமுகவிற்கு மறக்க முடியாத ஒரு நாளாக இருக்கப் போகிறது. அதற்கு முக்கிய காரணம், அதிமுக பொதுக் குழு நாளைய தினம் கூடுவது தான்.

அதாவது, “அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் யார்?” என்கிற சர்ச்சை, ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே பெரும் யுத்தமாக நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், தற்போது ஏரக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது என்றே சொல்லப்படுகிறது.

அதன்படி, சென்னையை அடுத்த வானகரத்தில் அதிமுக பொதுக் குழு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் மிகத் தீவிரமாகவே நடைபெற்று வருகிறது. 

இதனால், அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியே இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்த சூழலில் தான், நேற்று இரவு முதல் பொதுக்குழுவை புறக்கணிக்கும் முடிவு குறித்து சட்ட வல்லுனர்கள் மற்றும் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.

அதே நேரத்தில், ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 12 ஆக இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. தற்போது ஆதரவு மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 7 ஆக குரைந்து உள்ளது என்றும், கூறப்படுகிறது.

முக்கியமாக, கடைசிய 2 நாட்களில் மட்டும், ஓ.பன்னீர் செல்வத்திடம் இருந்த 5 மாவட்ட செயலாளர்கள், வரிசையாக எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவி இருக்கிறார்கள்.

அத்துடன், அதிமுகவில் மொத்தம் உள்ள 2,500 பொதுக் குழு உறுப்பினர்களில் கிட்டதட்ட 2,300 க்கும் மேற்பட்டவர்கள் எடப்பாடிக்கு ஆதரவாகவே உள்ளனர் என்றும், கூறப்படுகிறது. 

மேலும், நாளைய தினம் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், ஓ.பன்னீர் செல்வம் இன்று தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் முக்கிய ஆலோசனை நடத்தினார். 

இந்த முக்கிய ஆலோசனையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் தேனி சையது கான், கன்னியாகுமரி அசோகன், வெல்லமண்டி நடராஜன், வைத்தியலிங்கம், குன்னம் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த நேரத்தில் தான், “நாளை நடக்கும் பொதுக் குழுவுக்கு வாருங்கள்” என்று, ஓ.பன்னீர்செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார்.

முக்கியமாக, “ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் இருவரும் இணைந்து பொதுக் குழுவில் பங்கேற்போம்” என்றும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு, எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில் தான், கடைசி அஸ்திரமாக நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியிருந்த நிலையில், “அதிமுக பொதுக்குழுவில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு பங்கேற்க முடிவு செய்துள்ளதாக” வைத்திலிங்கம் தெரிவித்து உள்ளார்.

ஓ.பன்னீர்செல்வதுடன் இறுதியாக ஆலோசனை நடத்திய பிறகு, துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் இந்த தகவலை வெளியிட்டு உள்ளார். 

மிக முக்கியமாக, “ஓ.பி.எஸ் ஒப்புதல் அளித்த வரைவு தீர்மானத்தில் ஒற்றைத்தலைமை குறித்த விவகாரங்கள் இல்லை; இதுகுறித்து பொதுக்குழுவில் புதிதாக எதுவும் சேர்க்கக் கூடாது” என்றுமு், ஓபிஎஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இதற்கு, “அதிமுக பொதுக்குழுவில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், உத்தரவாதம் அளிக்க முடியாது” என்று, இபிஎஸ் தரப்பில் பதில் அளிக்கப்பட்டு உள்ளதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் தான், அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய சண்முகம் என்பவர் தொடர்ந்த வழக்கின் விசாரணை சற்று முன்னதாக வந்தது. 

அப்போது, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சார்பில் முத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால் வாதத்தை தொடங்கினார். “பொதுக்குழு அலுவல் நிகழ்வு குறித்து அஜெண்டா இது வரை வெளியிடப்படவில்லை” என்றும் சண்முகம் தரப்பு கூறியது.

இதனிடையே, “பொதுக்குழுவில் இது நடக்கும், இது நடக்காது என உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும், நாளை திருத்தம் நடக்கலாம், நடக்காமலும் போகலாம் என்றும், பொதுக்குழுவில் தான் உறுப்பினர்களின் விருப்பம் அறிவிக்கப்படும்” என்றும், எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.