“பொதுக்குழுவுக்கு வாருங்கள்” என்று, ஓ.பன்னீர்செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

“அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் யார்?” என்கிற சர்ச்சை தற்போது புதிய உச்சத்தை எட்டி இருப்பதுடன், அதிமுகவில் தற்போது இரட்டை தலைமையாக உள்ள ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே தற்போது பெரும் யுத்தம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

முக்கியமாக, எடப்பாடி பழனிசாமி இல்லம் முன் அதிமுகவினர் அதிக அளவில் அணி அணியாக திரண்டு வந்து ஆதரவு தருவதால், அங்கு பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டு உள்ளது.

அதே போல், ஓ.பன்னீர்செல்வத்தையும் அவரது ஆதரவாளர்கள் சந்தித்து, ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

என்றாலும், நாளைய தினம் சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவது ஏரக்குறைய உறுதியாகி உள்ளது.

இதன் காரணமாக, “பொதுக்குழுவை புறக்கணியுங்கள்” என்று, அதிமுக உறுப்பினர்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதி உள்ளார். 

ஆனாலும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் சென்று மீண்டும் தர்மயுத்தம் நடத்த உள்ளதாகவும், முன்னதாக தகவல்கள் வெளியாகி, அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இதனால், ஜெயலலிதா நினைவிடம் முன்பு ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக முழக்கங்களையும் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் தான்,அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 2,505 பேரிடம் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் கடிதம் பெற்று உள்ளார்.

அதன்படி, பொதுக்குழு உறுப்பினர்கள் 120 பேரை தவிர, அனைவரிடமும் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் கடிதம் பெற்று உள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

முக்கியமாக, “பொதுக்குழுவுக்கு வாருங்கள்” என்று, ஓ.பன்னீர்செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி முன்னதாக அழைப்பு விடுத்து உள்ளார்.

அத்துடன், “ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் இருவரும் இணைந்து, பொதுக் குழுவில் பங்கேற்போம்” என்று, எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வத்தை கேட்டுக்கொண்டு உள்ளார்.

ஆனாலும், அதிமுக பொதுக் குழுவில் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்ள மாட்டார் என்கிற தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், கட்சியின் பொருளாளர் என்ற அடிப்படையில், அவரிடம் இன்று வரவு - செலவு கணக்குகள் கொடுக்கப்பட்டு உள்ளன. 

இதற்கு காரணம், நாளைய தினம் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் வாசிப்பதற்காக இந்த வரவு - செலவு கணக்கு அவரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது என்றும், ஆனால் அவர் பொதுக்குழு கூட்டத்திற்கு வராத பட்சத்தில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான், சற்று முன்னதாக “அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக, இன்று மாலைக்குள் எனது நிலைப்பாட்டை நான் தெரிவிப்பதாக” ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தகவல்கள் கூறப்பட்டுள்ளதாகவும், செய்திகள் வெளியாகி, அதிமுகவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.