“நான் ஓ.பி.எஸ் பக்கமும் இல்லை.. இ.பி.எஸ் பக்கமும் இல்லை” என்று, முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தடாலடியாக பேசி உள்ளது, அக்கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், “அதிமுக பொதுக்குழு திட்டமிட்டப்படி நடைபெறும்” என்று, கே.பி.முனுசாமி உறுதிப்படத் தெரிவித்து உள்ளார்.

“அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார்?” என்கிற மீண்டும் எழுந்துள்ள சர்ச்சையில் அதிமுகவில் தற்போது இரட்டை தலைமையாக உள்ள ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே பெரும் யுத்தம் நடைபெற்றுக்கொண்டு இன்று புதிய உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.

அதாவது, அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து, ஓபிஎஸ் - இபிஎஸ் இன்று 7 வது நாளாக தனித்தனியாக ஆலோசனை நடத்தினர்.

இது தொடர்பாக முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்பது காலத்தின் கட்டாயம்” என்று, விளக்கம் அளித்தார்.

அத்துடன், “அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23 ஆம் தேதி நடைபெறும்” என்றும், அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.

குறிப்பாக, “அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டும் எண்ணம் இல்லை என்றும்;  சசிகலாவுக்கும், அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை” என்றும், தெளிவுப்பட விளக்கம் அளித்தார்.

முக்கியமாக, “ நான் ஓபிஎஸ் பக்கமும் இல்லை, ஈபிஎஸ் பக்கமும் இல்லை” என்று, தடாலடியாக கூறிய ஜெயக்குமார், “கட்சி தான் எனக்கு முக்கியம்” என்றும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாகவே,  ஓபிஎஸ் ஆதரவு நிலைபாடு கொண்ட அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், அவரது ஆதரவாளர்கள் ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதம் தொடர்பாக அவர்கள் விளக்கம் அளித்தனர்.

அப்பேர்து பேசிய வைத்திலிங்கம், “அதிமுக பொதுக்குழுவை ஒத்திவைக்க வலியுறுத்தி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பி உள்ளோம் என்றும், நிகழ்ச்சி நிரலை முன்கூட்டியே நிர்ணயித்து பொதுக்குழுவை நடத்த வேண்டும்” என்றும், குறிப்பிட்டார்.

மேலும், “ஓ.பன்னீர்செல்வத்துக்கு 30 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு உள்ளது என்றும்; 15 மாவட்ட செயலாளர்கள் நேரடியாக ஆதரித்துள்ளனர் என்றும், 15 மாவட்ட செயலாளர்கள் நடுநிலை வகிக்கின்றனர்” என்றும், அவர் கூறினார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, “திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்” என்று, உறுதிப்படத் தெரிவித்தார்.

அத்துடன், “நிர்வாகிகளுக்கு முறையாக தலைமைச் கழகத்தில் இருந்து பதிவு தபால் அனுப்பப்பட்டுள்ளது என்றும், பொதுக்குழுவில் உள்ள கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு ஒப்புகை கடிதம் பெறப்பட்டுள்ளது என்றும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். எழுதியதாக வைத்தியலிங்கம் வெளியிட்ட கடிதம் பற்றி எனக்கு தெரியாது” என்றும், வெளிப்படையாகவே பேசினார்.

முக்கியமாக, “பொதுக்குழு கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் நிச்சயம் வருவார் என்றும், அங்கு கட்சியின் தீர்மானத்தையும் அவர் ஏற்றுக் கொள்வார்” என்றும், கே.பி.முனுசாமி உறுதிப்படத் தெரிவித்தார். 

இப்படியாக, ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆதரவு தலைவர்கள் மாறி மாறி செய்தியாளர்களை சந்தித்து பேசி வருவது, அதிமுகவில் பெரும் பரபரப்பையும், அசாதாரமான சூழலையும் ஏற்படுத்திழ உள்ளது குறிப்பிடத்தக்கது.