தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனருமான விஜயகாந்த் அவர்கள் தற்போது உடல் நலக்குறைவு  காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இரத்த ஓட்டம் சீராக அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் அவர்களின் உடல் நலன் கருதி தவிர்க்க முடியாத காரணங்களால் அவரது வலது காலில் மூன்று விரல்கள் அகற்றப்பட்டுள்ளதாக தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடப்பட்டது. இதனையடுத்து ரசிகர்கள், முன்னணி திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் விஜயகாந்த் நலமுடன் வீடு திரும்ப வேண்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், “என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.” என தெரிவித்து பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது விஜயகாந்த் அவர்கள் நலமுடன் வீடு திரும்ப வேண்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இனிய நண்பர் விஜயகாந்த் பூரண குணமடைந்து,  முழு நலமுடன் வீடு திரும்ப விரும்புகிறேன். விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன்.” என தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் அந்த ட்விட்டர் பதிவு இதோ…

 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இனிய நண்பர் விஜயகாந்த் பூரண குணமடைந்து, முழு நலமுடன் வீடு திரும்ப விரும்புகிறேன். விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன்.

— Kamal Haasan (@ikamalhaasan) June 22, 2022