“அதிமுகவை அழிக்க யார் நினைத்தாலும், நான் முன்னின்று காப்பேன்” என்று, எடப்பாடி பழனிசாமி சூளுரைத்து உள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் இபிஎஸ் உடன் சந்தித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

“அதிமுகவின் பொதுச்செயலாளர் யார்?” என்கிற சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அதிமுகவில் தற்போது இரட்டை தலைமையாக உள்ள ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே பெரும் யுத்தம் நடைபெற்றுக்கொண்டு இன்றும் புதிய உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.

அதாவது, அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து, ஓபிஎஸ் - இபிஎஸ் இன்று 8 வது நாளாக தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக முன்னதாக அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் மத்தியில் பேசிய  அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக கட்சியை பலவீனப்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள் என்றும், அதையெல்லாம் முறியடித்து ஐ.டி. பிரிவு துணை கொண்டு எதிர்காலத்தில் அதிமுகவை பலம் பொருந்தியதாக மாற்ற வேண்டும்” என்றும், சூளுரைத்தார். 

“இதற்கு ஐ.டி.பிரிவின் பங்கு முக்கியம் என்றும், அதிமுகவின் நல்ல எதிர் காலத்தை உறுதி செய்ய உங்களுடன் பாடுபடுவேன் என்றும், அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது, நானே முன்னின்று காத்து நிற்பேன்” என்றும், அவர் சூளுரைத்தார்.

அத்துடன், “பலம் வாய்ந்த கட்சி அதிமுக வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை” என்றும், இபிஎஸ் எழுச்சியுடன் பேசினார்.

இப்படியாக, எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்த நிலையில், “அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி” என்று, அவரது முன்னிலையில் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் எழுச்சி முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது, அதிமுக தகவல் தொழில் நுட்ப நிர்வாகிகளின் எழுச்சி முழக்கத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில், எடப்பாடி பழனிசாமி அமைதியாக நிற்கும் காட்சிகளும், தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகின்றன. 

இதனால், “அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் எதிர்ப்பையும் மீறி, அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கான தனித் தீர்மானம் இன்றைய தினமே இறுதி முடிவு செய்யப்படும்” என்கிற தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளன.

அதே நேரத்தில், ஒற்றை தலைமை விவகாரத்தில் சட்ட ரீதியான முயற்சிகளை மேற்கொள்வது குறித்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக இருந்த நெல்லை மாவட்ட செயாலளர் தச்சை கணேச ராஜா, விருதுநகர் மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரன் ஆகியோர், தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

முக்கியமாக, எடப்பாடி பழனிசாமி இல்லம் முன் அதிமுகவினர் அதிக அளவில் அணி அணியாக திரண்டு வந்து ஆதரவு தருவதால், அங்கு பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டு உள்ளது.

அதே நேரத்தில், முன்னாள் அமைச்சர்களான செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, தம்பிதுரை எம்.பி. ஆகியோர் ஓ.பன்னீர் செல்வம் இல்லத்திற்கு சென்று சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், இந்த பேச்சு வார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்பாடத நிலையில், தற்போது ஓபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் இபிஎஸ் உடன் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி, அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.