அதிமுக பொதுக்குழுவிற்கு வந்த ஓ.பன்னீர்செல்வத்தை வெளியேற சொல்லி ஈபிஎஸ் ஆதரவாளர்கள் முழக்கங்களை எழுப்பியதால், அங்கு பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.

இன்றைய தினம் அதிமுகவிற்கு மறக்க முடியாத ஒரு நாளாக இருக்கப் போகிறது. அதற்கு முக்கிய காரணம், அதிமுக பொதுக் குழு இன்றைய தினம் கூடுவது தான்.

அதாவது, “அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் யார்?” என்கிற சர்ச்சை, ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே பெரும் யுத்தமாக நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், தற்போது ஏரக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது என்றே ஒரு பக்கம் கூறப்படுகிறது.

அதன்படி,  அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியே இருப்பதாகவும் வெளிப்படையாகவே தெரிய வந்தது.

இதனையடுத்து, சென்னையை அடுத்த வானகரத்தில் அதிமுக பொதுக் குழு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் மிகத் தீவிரமாகவே நடைபெற்று வந்த நிலையில், காலலை முதலே, கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் காலை முதலே அங்கு வரிசையாக வந்தனர்.

இதனால், அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மதுரவாயல் - வானகரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் வெளியூரில் இருந்து பல விதமான வாகனங்களில் வானகரத்தில் ஒரே நேரத்தில் குவிந்தனர். இதன் காரணமாக, கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து மதுரவாயல் வரை வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையே அங்கு ஏற்பட்டு உள்ளது. 

அத்துடன், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சிலர் போலியான அடையாள அட்டையுடன் நுழைய முயற்சி செய்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருடன் அதிமுக தொண்டர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்தில் திடீரென்று பரபரப்பு ஏற்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, அங்கு கூடியிருந்த அதிமுக தொண்டர் படையினருக்கு மத்தியில், பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்திற்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்தார். 

அப்போது, அங்கு குவிந்திருந்த ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மாறிமாறி ழுழக்கங்களை எழுப்பினர். 

அதன் தொடர்ச்சியாக, அந்த திருமண மண்டபத்திற்கு உள்ளே வந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. 

அதே நேரத்தில், திருமண மண்டபத்திற்குள் ஓ.பன்னீர் செல்வம் வருகை தந்த நிலையில், அவரை எடப்படி பழனிசாமி கண்டுகொள்ளாமல் இருந்தார் என்கிற தகவலும் வெளியாகி உள்ளன. 

குறிப்பாக, ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று, அங்கு எடப்படி பழனிசாமி ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர்.

மேலும், வைத்திலிங்கம் மேடையில் அமர்ந்திருந்த நிலையில், கீழே இருந்த சக தொண்டர்கள், “வைத்திலிங்கத்தைப் பார்த்து துரோகி” என்று முழங்கினர். இதனால், பொதுக்குழு மேடையில் இருந்து வைத்திலிங்கம் கீழே இறங்கினார்.

இதனால், ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மாறிமாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அதிமுக பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.