கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக தொடர்ந்து 2 வது நாளாக கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும், சசிகலா பதில் அளித்து உள்ளார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017 ஆம் ஆண்டு மர்ம கும்பல் ஒன்று புகுந்து, அங்குள்ள காவலாளியான ஓம்பகதூரை கொலை செய்து விட்டு, அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த கோத்தகிரி போலீசார், “சயான், மனோஜ், மனோஜ் சாமி உட்பட மொத்தம் 10 பேரை அதிரடியாகக் கைது” செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் தேடப்பட்டு வந்த நிலையில், அவர் திடீரென்று சாலை விபத்தில் உயிரிழந்தார். 

அதே போல், அந்த எஸ்டேட்டின் சிசிடிவி ஆபரேட்டரான தினேஷ் தற்கொலை செய்து கொண்டார். அத்துடன், குற்றவாளியான சயானின் குடும்பத்தினர் சென்ற கார் திடீரென்று விபத்தில் சிக்கிய நிலையில், அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இப்படியாக, கோடநாடு கொலை - கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அடுத்தடுத்து இறந்ததால், கோடநாடு கொலை - கொள்ளை வழக்கு மிகப் பெரும் சர்ச்சையாகி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், கோத்தகிரி காவல் துறையினர் இதனை சாதாரண கொலை - கொள்ளை வழக்கு போல் விசாரித்து கோத்தகிரி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்தனர். 

அதன் பின்னர்,  “இந்த வழக்கு சரிவர விசாரிக்கப்படவில்லை எனவும், பல அதிமுக பிரமுகர்களுக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாகவும்” சந்தேகங்கள் கிளம்பியது. பின்னர், இந்த வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், இந்த வழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டது. ஆனால், திமுக ஆட்சி அமைத்தவுடன் மீண்டும் கோடநாடு வழக்கு தூசி தட்டப்பட்டு மேல் விசாரணையைத் தொடங்கியது. 

இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.  

அதன் படி, கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக, நேற்றும் - இன்றும் சசிகலாவிடம் சுமார் ஐந்தரை மணி நேரம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது, அடுக்கடுக்கான கேள்விகள் அவர் முன்பு வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதன் படி, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் தனிப்படை போலீசார், விசாரணையை நிறைவு செய்தனர். இதில், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார், துருவி துருவி கேள்வி கேட்டு வாக்குமூலம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், நேற்றைய தினம் ஐந்தரை மணி நேரம் விசாரணை நடந்த நிலையில், இன்றைய தினம் இந்த வழக்கு தொடர்பாக  2 வது நாளாக சென்னை தி.நகர் வீட்டில் சசிகலாவிடம், சுமார் 10 மணி நேரம் விசாரணை நடந்து உள்ளது என்று கூறப்படுகிறது.

கேள்விகள் என்ன?

இந்த விசாரணையின் போது, 

- “சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற பின்னர், கோடநாடு எஸ்டேட்டில் உள்ள பங்களாவின் கண்காணிப்புப் பணியை யாரிடம் கொடுத்தீர்கள்?”

- “கோடநாடு எஸ்டேட்டின் சிசிடிவி கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்த தினேஷ் குமார், தற்கொலை செய்வதற்கு முன்னர் உங்களிடமோ அல்லது உங்களது உறவினரிடமோ அவர் பேசினாரா?”

- “சிசிடிவி காட்சிகளை எத்தனை நாட்களாக தினேஷ் குமார் ஆய்வு செய்து வந்தார்? என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?”

- “கோடநாடு பங்களாவில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, சிசிடிவி கேமராக்கள் செயல்படாதது குறித்து முன்கூட்டியே உங்களுக்கு தகவல் எதுவும் தெரியுமா?” 

- “கொலை, கொள்ளைச் சம்பவம் குறித்து கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் முதலில் யாரிடம் தகவல் கூறினார்?”

- “எப்போதும் மின்தடை ஏற்படாத பகுதியான கோடநாடு எஸ்டேட் பகுதியில் கொலை - கொள்ளைச் சம்பவம் நடந்த போது ஏற்பட்ட மின்தடை குறித்து யாரிடமாவது நீங்கள் விசாரித்தீர்களா?”

உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் சசிகலாவிடம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு சசிகலா அளித்த பதில்கள் அனைத்தும், வாக்குமூலங்களாகவே போலீசார் வீடியோவாக பதிவு செய்துகொண்டனர்.

குறிப்பாக, சசிகலாவிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து அவரது  வழக்கறிஞர் ராஜ செந்தூர் பாண்டியன் கூறும்போது, “சசிகலாவிடம் விசாரணை முறையாக நடைபெற்றது” என்று, குறிப்பிட்டார். 

மேலும், “சசிகலாவிடம் நடத்திய விசாரணையில், காவல் துறையினருக்கு முழு திருப்தி ஏற்பட்டு உள்ளது என்றும், சசிகலாவிடம் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் எந்தவித தயக்கமும் இன்றி, சசிகலா பதில் அளித்து உள்ளார்” என்றும், கூறினார். 

அத்துடன், “கொடநாடு பங்களாவை புதுப்பிக்கவும், அங்கு செல்லவும் சசிகலாவுக்கு தடை இல்லை” என்றும், வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன், தெரிவித்தார்.