“பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்” என்று, நடிகர் பாக்யராஜ் பேசியது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

“மோடியை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார்” என்று, இசையமைப்பாளர் இளையராஜா கடந்த வாரம் பேசியது, சர்ச்சைக்குறிய வகையில், இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. இது தொடர்பான விமர்சனங்கள் தற்போது வரை முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதனைத் தொடர்ந்து “பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்” என்று, நடிகர் பாக்யராஜ்  தற்போது பேசி உள்ளது, இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

அதாவது, “பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் - புதிய இந்தியா 2022” என்ற தலைப்பில் சென்னை கமலாலயத்திலுள்ள பாஜக அலுவலகத்தில் இன்றைய தினம் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. 

இந்த நூல் வெளியீட்டு விழாவில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நூலை வெளியிட்டார். அத்துடன், அண்ணாமலை வெளியிட்ட இந்த நூலை, இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் பெற்றுக்கொண்டார்.

இந்த புத்தகத்தை பெற்றுக்கொண்ட பிறகு இந்த புத்தக வெளியிட்டு விழாவில் பேசிய நடிகர் பாக்யராஜ், “பாஜக மாநில தலைவராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டது பெருமைக்குரிய விஷயம்” என்று, குறிப்பிட்டார்.

“அண்ணாமலை, காவல் அதிகாரியாக பணி செய்த போது, பெங்களூரு நகரில் சிறப்பாக பணி செய்தார் என பலரும் பாராட்டி இருக்கிறார்கள் என்றும, நான் கர்நாடகா சென்றிருந்த போது அவரைப் பற்றி பெருமையாக பேசியது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது என்றும், அந்த வகையில் தமிழகத்துக்கு சிறப்பான ஒருவர் பாஜக தலைவராக அறிவிக்கப்பட்டு உள்ளார்” என்றும், நடிகர் பாக்யராஜ் புகழ்ந்து பேசினார்.

தொடர்ந்து பேசிய நடிகர் பாக்யராஜ், “பலரும் பிரதமர் நிறைய வெளிநாடுகள் சென்றதை விமர்சிப்பார்கள். உண்மையில் பயணிப்பதற்கான உடல் தகுதி இருப்பதால் அவர் அடிக்கடி வெளிநாடு போகிறார்” என்று, சுட்டிக்காட்டினார்.

“இந்த விஷயத்தை, இத்தனை நாடுகளுக்கு ஓய்வில்லாமல் எப்படி அவர் செல்கிறார்? அவர் உடலை எப்படி வைத்துக் கொள்கிறார்? என்று தான் நான் பார்ப்பேன் என்றும், இந்தியாவுக்கு இப்படி எனர்ஜியான ஒரு பிரதமர் தான் தேவை” என்றும், அவர் வலியுறுத்தினார்.

“வெளிநாட்டு பயணம் சென்றாலும், இந்தியாவில் எந்த இடத்தில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அங்கேயும் அவர் பங்கேற்பார் என்றும், அந்த வகையில் மிகவும் வேகமாக செயல்படும் பிரதமர் மோடி” என்றும், பிரதமரின் புகழ் பாடினார்.

“காஷ்மீர் பிரச்னை, இலங்கை பிரச்னை, உக்ரைன் போர் என எதுவாக இருந்தாலும், விமர்சனங்கள் இருக்கும். பலர் விமர்சனம் செய்தாலும் கூட, பிரதமர் எதற்கும் செவி சாய்க்காமல் இருக்கிறார்” என்றும், பாக்யராஜ் குறிப்பிட்டார்.

“இக்கட்டான சூழல் வரும்போது அதை சமாளிப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம் என்றும், எப்படி சென்றாலும் செயல்பட்டாலும் பிரதமர் மீது விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது” என்றும், அவர் சுட்டிக்காட்டினார். 

“விமர்சனங்களை எதிர்கொள்ள, பிரதமருக்கு நான் ஒரு சின்ன டிப்ஸ் தருகிறேன்” என்று குறிப்பிட்ட நடிகர் பாக்யராஜ், “விமர்சனம் பண்றவங்க எல்லாருமே 3 மாசம் குறைபிரசவத்துல பிறந்தவங்கனு நினைச்சுகோங்க” என்று சர்ச்சைக்குறிய வகையில் பேசினார்.

தொடர்ந்து பேசிய பாக்யராஜ், “ஏன் 3 மாசம்னு சொல்றேன்னா, 4 வது மாசம்தான் ஒரு சிசுவுக்கு வாய் உருவாகும். 5 வது மாசம் தான் காது உருவாகும். வாயும் சரியா வரலை, காதும் சரியா கேட்காதவங்களைதான் 3 வது மாசமே பிறந்த `குறை பிரசவ’ குழந்தைனு சொல்றேன். இப்படியானவங்க நல்லதை அவங்களும் பேசமாட்டாங்க, நல்லது சொன்னா அதை காது கொடுத்தும் கேட்க மாட்டாங்க” என்று, சர்ச்சைக்குறிய வகையில் மிக கடுமையாகவே விமர்சனம் செய்தார்.

மேலும், “பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டு இருக்கிறது என்றும், இந்த புத்தகத்தை நான் பெற்று கொண்டது எனக்கு பெருமையாக இருக்கிறது” என்றும், நடிகர் பாக்யராஜ் பேசினார்.