தமிழ் சினிமாவின் அதிரடி ஆக்ஷன் கதாநாயகர்களில் ஒருவராக தொடர்ந்து வரிசையாக அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் விஷால் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். முன்னதாக இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான துப்பறிவாளன் படத்தின் 2ம் பாகமாக தயாராகும் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். 

அடுத்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். விஷாலுடன் இணைந்து நடிகர் S.J.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வரிசையில் அடுத்ததாக விஷால் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் லத்தி. மீண்டும் காவல்துறை அதிகாரியாக விஷால் நடிக்கும் லத்தி படத்தை ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ராணா மற்றும் நந்தா இணைந்து தயாரிக்க இயக்குனர் வினோத் குமார் இயக்கியுள்ளார். லத்தி படத்தில் சுனைனா & பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவர உள்ள லத்தி படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் பீட்டர் ஹெயின் ஸ்டண்ட் இயக்கத்தில் லத்தி திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக  சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் லத்தி திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் அடுத்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் 24ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.