“தமிழ்நாட்டில் இனி முகக்கவசம் அணியாவிடில் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்” என்று, மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு உட்பட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சற்று குறைந்து காணப்பட்ட கொரோனா என்னும் கொடிய அரக்க நோய், மீண்டும் மெல்ல மெல்ல எட்டிப் பார்க்கத் தொடங்கி இருக்கிறது.

அந்த வகையில், இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட நிலையில், “இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 451 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என்றும், இது நேற்றுயை பாதிப்பை விட இன்று அதிகம்” என்றும், கூறப்பட்டு உள்ளது.

இதனால், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது, 4 கோடியே 30 லட்சத்து 52 ஆயிரத்து 435 ஆக உயர்ந்து உள்ளது” என்றும், குறிப்பிடப்பட்டு உள்ளது.

குறிப்பாக, “இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 14 ஆயிரத்து 241 பேர் தற்போது தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும், இந்த கொரோனா தாக்குதலால், கடந்த 24 மணி நேரத்தில் 54 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும், இதன் காரணமாக, இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கையானது 5 லட்சத்து 22 ஆயிரத்து 116 ஆக அதிகரித்து இருக்கிறது” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் தான், “தமிழ்நாட்டில் இனி பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் வசூலிக்க” தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

இது தொடர்பாக இன்றைய தினம் செய்தியாளர்கள் சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் வசூலிக்க மீண்டும் உத்தரவிடப்பட்டு உள்ளது” என்று குறிப்பிட்டார். 

“இந்த அபராதம் வசூலிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால், அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார். 

“கொரோனா அதிகரிப்பதால், பதற்றம் அடைய தேவை இல்லை என்று, மத்திய அரசே கூறி உள்ளது என்றும், கல்வி நிறுவனங்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே வழங்கி உள்ளோம்” என்றும், அவர் கூறினார். 

அத்துடன், “சென்னை ஐஐடியில் கொரோனா உறுதியான மாணவர்கள் உடல் நிலை சீராகவே உள்ளது என்றும், அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்” என்றும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தெரிவித்தார்.

சென்னை ஐஐடியில் மட்டுமே கடந்த 3 நாட்களில் மொத்தம் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதன் படி, “வட மாநிலங்கள் மற்றும் சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா பரவல் சற்று அதிகரித்த காரணமாக, இந்த உத்தரவு வந்து உள்ளதாகவும்” தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே, தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க மருத்துவக் கல்வி இயக்குநர் முன்னதாக அதிரடியாக உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.