“ஆளுநரின் தேநீர் விருந்தை ஏன் புறக்கணித்தேன் தெரியுமா?” என்று, தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னதாக விளக்கம் அளித்து உள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ் புத்தாண்டு தினத்தில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலன அரசியல் கட்சித் தலைவர்களுக்கு “தேநீர் விருந்துக்கு” வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிரான மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதுடன், தமிழக அரசின் பல்வேறு மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல், கிடப்பில் போட்டு வைப்பதாகவும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது, தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை கூறி வந்தது.

இந்த நிலையில்தான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் சுமூகமான போக்கு இல்லாத காரணத்தால், இந்த தேநீர் விருந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக புறக்கணித்தார். இதனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் தேநீர் விருந்துக்கு செல்லாத நிலையில், தமிழகத்தில் உள்ள இன்னும் பல அரசியல் கட்சிகளும், ஆளுநரின் தேநீர் விருந்தை அதிரடியாகவே புறக்கணித்தது. இது, தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையாகவே வெடித்து, பெரும் விவாத பொருளாக மாறியது.

இந்த நிலையில் தான், “ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணிக் கட்சியினர் புறக்கணித்தது குறித்து விமர்சனம் செய்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “ஆளுநருக்கு டீ செலவு மிச்சம்” என்று, கிண்டலாக கூறினார். 

இதற்கு பதிலடியாக, “டீசல் செலவு மிச்சம்” என்று திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் பெரிய அளவில் வார்த்தை யுத்தம் நடத்தியது. இது, தமிழக அரசியலில் பெரும் பேசும் பொருளாக மாறிய நிலையில், தமிழக அரசுக்கும் - ஆளுநர் என்.ஆர்.ரவிக்கும் உள்ள மோதல் போக்கு பட்டவத்தனமாக வெளியே தெரிய வந்தது. 

இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 4 நாள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டமன்றம் இன்று மீண்டும் கூடியது.

அப்போது, “தமிழக ஆளுநர் ரவி அளித்த தேநீர் விருந்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை” என்று, சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னதாக விளக்கம் அளித்தார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ஒட்டு மொத்த தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தும் நீட் விலக்கு மசோதா 210 நாட்களாக ஆளுநர் மாளிகையில் கவனிப்பாரன்றி முடங்கிக்கிடக்கின்றது” என்று, குறிப்பிட்டார். 

அத்துடன், “நீட் விலக்கு மசோதா முடங்கி கிடக்கும் போது, ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் எப்படி பங்கேற்க முடியும்?” என்றும், முதல்வர் கேள்வி எழுப்பி உள்ளார்.

“நீட் விலக்கு மசோதாவை முடக்குவது தமிழக மக்களை அவமதிப்பதாகும்” என்றும், முதல்வர் விமர்சித்து உள்ளார்.

மேலும், “நூற்றாண்டு கண்ட சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநர் மாளிகையில் முடங்கி கிடக்கிறது என்றும், தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கிறது என்றால் நான் வலியையும், அவமானத்தையும் தாங்கிக்கொள்வேன்” என்றும், அவர் கூறினார்.

“ஆளுநர் மீது எனக்கு தனிப்பட்ட விரோதம் எனக்கு இல்லை என்றும், தனிப்பட்ட முறையில் ஆளுநருக்கும், எனக்கும் சுமூக உறவு இருக்கிறது” என்றும், அவர் குறிப்பிட்டார். 

“நான் ஆட்சி நடத்தும் விதத்தை பொது மேடையிலேயே ஆளுநர் பாராட்டி பேசியிருக்கிறார் என்றும், ஆளுநருடன் உண்டான மரியாதையை தொடர்ந்து வழங்குவோம்” என்றும், முதல்வர் தெரிவித்தார்.

“நீட் விலக்கு மசோதா கிடப்பில் கிடப்பது குறித்து விவாதிக்க தேவைப்பட்டால், சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என்றும், நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநர் முடிவு எடுத்திருப்பதாக ஊடங்களில் செய்தி வெளியாகி உள்ளது” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.