“தமிழக ஆளுநர் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி, குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரிடம் அதிமுக புகார் மனு அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“தருமபுரி ஆதின நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றால் போராட்டம் நடத்தப்படுவது உறுதி” என்று, தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஒன்றாக சேர்ந்து அறிவித்திருந்த எச்சரிக்கையையும் மீறி, இதைப் பற்றி எல்லாம் துளியும் கவலைப்படாத தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தருமபுரம் ஆதீனம் மடத்திற்கு வருகை தந்து, நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது, ஆளுநரின் கார், மயிலாடுதுறையை அடுத்த மன்னம்பந்தல் ஏ.வி.சி.கல்லூரி எதிரில் சென்ற போது, அங்கு ஏற்கனவே திரண்டு வந்து நின்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஒன்று திரண்டு, தமிழக ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

எனினும், ஆளுநரின் பார்வையில் போராட்டக்காரர்கள் யாரும் படாத வகையில், போலீசார் வாகனத்தை கொண்டு வந்து வித்தியாசமான முறையில் மறைத்து நிறுத்தினர். இதனால், போராட்டக்காரர்கள் கருப்பு கொடியை சாலையில் தூக்கி எறிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால், போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே அப்போது பெரும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக, அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டிய 77 பேரை போலீசார் கைது செய்தனர். 

அதே நேரத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்பட்ட விவகாரத்தை பாஜக கையில் எடுத்த நிலையில், இது தொடர்பாக, சட்டசபையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மான கொண்டு வந்தது. இதனைத் தொடர்ந்து, ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்பட்டது குறிதது சட்ட சபையில் விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  “இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநரின் கான்வாய் மீது கற்கல், கொடிகள் வீசியதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என்றும், போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுப்புகள் அமைத்து கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர் என்றும், அதன் பின்னர் அவர்களை கைது செய்து வாகனங்களில் ஏற்றினர்” என்றும், சுட்டிக்காட்டினார்.

அத்துடன், “வாக்குவாதம் செய்து பிளாஸ்டிக் பைப்புகளில் கட்டப்பட்டிருந்த கருப்பு கொடி வீசி எறிந்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை என்பதை மிகத் தெளிவாக காவல்த் துறை கூடுதல் இயக்குநர் வெளிப்படுத்தி உள்ளார்” என்றும், முதல்வர் சுட்டிக்காட்டினார்.

அதன் தொடர்ச்சியாக, சென்னை திரும்பிய ஆளுநர், நேற்றைய தினம் டெல்லிக்கு புறப்பட்டு சென்ற நிலையில், இன்றைய தினம் அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் நிலையில், “தமிழக ஆளுநர் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், இதனால் தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி, குடியரத் தலைவர் மற்றும் பிரதமருக்கு அதிமுக புகார் மனு அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த புகார் மனுவில், “தமிழக ஆளுநர் பாதுகாப்பில் குறைபாடுகள் இருக்கிறது என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம், பெண்கள் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் ஆகியவற்றில் திமுக அரசின் மீது அரசியல் சாசனத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினரும், வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளருமான முருகவேல், இந்த புகார் மனுவை அளித்துள்ளார்.

இப்படியாக, அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட இந்த புகார் மனுவானது, குடியரத்து தலைவர் மற்றும் பிரதமர், மத்திய உள்துறை அமைச்சகம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு மின் அஞ்சல், பதிவு தபால் மூலம் புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இதனிடையே, அதிமுக அனுப்பி உள்ள புகார் மனு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.