மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் பிரபல பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் கலந்துரையாடும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி  மூன்று நாட்கள் பயணமாக மும்பை சென்றுள்ளார். மும்பையில் முகாமிட்டிருக்கும் அவர், மராட்டிய அரசியல் கட்சி தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்து வருகிறார்.  அந்த வகையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நேற்று சந்தித்து பேசினார். 

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக  ஒருங்கிணைந்த மாற்றுக் கட்சியை உருவாக்கும் முயற்சியில் மம்தா பானர்ஜி ஈடுபட்டு வருவதால் பல்வேறு மாநிலத்தின் அரசியல் கட்சித் தலைவர்களையும் அவர் சந்தித்து பேசி வருகிறார். 

அதன்படி நேற்று சிவில் சமூகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் திரையுலகினரைச் சேர்ந்தவர்கள், ஊடகவியலாளர்கள், சமூக மற்றும் கலாச்சார அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, சமீபத்திய  அரசியல் முரண்கள் குறித்து மம்தாவுடன் கலந்துரையாடினர்.

 SWARA BHASKAR MAMTHA BANERJEE

இந்த நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கரும் கலந்து கொண்டார். சமூகத்தில் நிகழும் அவலங்களையும், ஆங்காங்கே நடக்கும் அரசு வன்முறைகளையும் வெளிப்படையாக ஒளிவு மறைவின்றி குறிப்பிட்டு வருபவர் ஸ்வரா பாஸ்கர். 

நேற்றைய நிகழ்ச்சியில் நாட்டில் சட்ட விரோதச் செயல்பாடுகள் (தடுப்பு) சட்டம் - (UAPA) தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார். "வணங்க மறுத்த பிறகும், கடவுள் போல் செயல்படும் அரசு நிர்வாகம் UAPA வழக்குகளை தட்சணையாக அள்ளிக் கொடுத்து வருகிறது" என்று தெரிவித்தார். 

மேலும் கதைகள் பாரம்பரியம் கொண்ட ஒரு நாட்டில், தற்போது கதை சொல்லவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்ப்புக் குரலை பதிவு செய்ய கலைஞன் தன் வாழ்வாதாரத்தை பணயம் வைக்க வேண்டியுள்ளது. 

அடையாளம் தெரியாத, முகம் தெரியாத கும்பல் வன்முறையை, சாதாராண  மக்களும் சந்தித்து வருகின்றனர். காவல் துறையும், அரசு நிர்வாகமும் கைகட்டி வேடிக்கை பார்ப்பதன் மூலம், வன்முறை சம்பவங்கள் அதிகரித்துவிட்டன" என்று தெரிவித்தார். 

ஸ்வரா பாஸ்கரின் மனக்குமுறல்களைக் கேட்டு வியப்படைந்த மம்தா பானர்ஜி, " எதற்கும் அஞ்சாத, அநீதியை கண்டு பொங்கி எழும் நீங்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது" என்று வினவினார்.

இதற்கு அரங்கத்தில் இருந்த அனைவரும் பலத்த கைதட்டி ஆரவாரம் செய்தனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.    

இதற்கிடையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மம்தா பானர்ஜி, “ஐக்கிய முற்போக்குக் கூட்டணியா, அப்படீன்னா என்ன? ஐக்கிய முற்போக்கு கூட்டணி இப்போது இல்லை. அது என்ன செய்து கொண்டிருக்கிறது? அரசியலில் தொடர்ச்சியாக செயல்படுவது அவசியம், தொடர்ந்து வெளிநாட்டில் இருந்தால் என்ன செய்ய முடியும்” என்று ராகுல் காந்தியையும் போகிற போக்கில் விமர்சித்தார் மம்தா பானர்ஜி.

மேலும்  “நமக்குத் தேவை இல்லாத பா.ஜ.க.வை தூக்கி எறியுங்கள், தேசத்தைக் காப்பாற்றுங்கள் என்பதுதான். மாற்று கூட்டணி வலுவாக இருக்க வேண்டும். இதனை நான் தனியாக செய்ய முடியாது. போராடத் தயாராக இல்லாதவர்களை நாம் என்ன செய்ய முடியும்? அனைத்து கட்சிகளும் அந்த லட்சியத்தை நோக்கி போராட வேண்டும்.

RAHUL GANDHI

அரசியல் ரீதியாக பா.ஜ.க. இந்த நாட்டில் இருக்கக் கூடாது என்று நான் போராடுகிறேன். காங்கிரஸ் கட்சி மேற்கு வங்காளத்தில் போட்டியிடலாம் என்றால் நாங்கள் ஏன் கோவாவில் போட்டியிடக்கூடாது” என கூறினார். 

இதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறும்போது “ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்றால் என்ன என்று மம்தா பானர்ஜிக்குத் தெரியாதா? பைத்தியக்காரத்தனத்தை அவர் தொடங்கி விட்டார். ஒட்டுமொத்த இந்தியாவும் ஏதோ மம்தா மம்தா மம்தா என்று கூக்குரலிடுவது போல் அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். 

அதேபோல் இந்தியா என்பது வங்காளம் மட்டுமல்ல. கடந்த தேர்தலில் அவர் கையாண்ட உத்திகள் கொஞ்சம் கொஞ்சமாக அம்பலமாகி வருகின்றன.

2012-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 6 அமைச்சர்கள் இருந்தனர். அப்போது அரசை கவிழ்க்க ஆதரவை வாபஸ் பெற்றவர்தானே மம்தா. இப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி  என்றால் என்ன என்று கேட்கிறார். ஆனால் அன்று அவரது சூழ்ச்சி பலிக்கவில்லை மற்ற கட்சிகள் அன்று எங்களுக்கு ஆதரவு அளித்தன.

மம்தா இன்று பெரிய ஆளாக தன்னை நினைத்துக் கொள்ள அவருக்குப் பின்னால் மோடி இருக்கிறார். அதனால்தான் காங்கிரசை பலவீனப்படுத்த அவர் முயற்சி செய்கிறார்” என்று தாக்கினார்.

மேலும் ராகுல் காந்தியை மறைமுகமாகத் தாக்கிப் பேசிய மம்தாவைக் கண்டித்துக் கூறிய காங்கிரஸ் கட்சி, “ராகுல் காந்தியை விமர்சித்து விட்டு எந்த ஒரு தனிக்கட்சியும் பா.ஜ.க.வை எதிர்த்துப் போராட முடியாது. ஜனநாயகத்துக்கும், நாட்டுக்கும் காவல் புரிய காங்கிரஸ் கட்சிதான் ஒரே மாற்று” என்று தெரிவித்துள்ளது.