15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி 3 ஆம் தேதி துவங்கவுள்ள நிலையில், கொரோனா தடுப்பூசிக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் கோவின் (CoWIN) செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கோவின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் ஒமிக்ரான் குறித்த அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. கொரோனாவை வெல்லும் பேராயுதமான தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2 தவணைகளாக செலுத்தப்பட்டு வருகிறது. 

இதற்கிடையே 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு ஜனவரி 3 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அறிவித்தார். இதேபோல் ஜனவரி 10 ஆம் தேதி முதல் சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் மோடி அறிவித்திருந்தார்.

cowin app vaccinationமேலும் இணை நோயுள்ளவர்கள், மருத்துவர்களின் பரிந்துரையை பெற்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. தமிழகத்தில் சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணிக்கான முன் ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது.

இதையடுத்து சென்னை கிண்டி மடுவின்கரையில் நேற்று நடைபெற்ற 16-வது மெகா தடுப்பூசி முகாமில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் 15 முதல் 18 வயதுள்ளவர்கள் 33.20 லட்சம் வளரிளம் பருவத்தினர் உள்ளனர். 

அவர்களுக்கு ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தம் பணி துவங்க உள்ளது. பள்ளிகளுக்கே சென்றும், முகாம்கள் மூலமும் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். மேலும் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த பிரதமர் அறிவித்துள்ளார்.

அதன்படி முன்களப்பணியாளர்கள் 1.40 கோடி பேர் உள்ளனர். அவர்களுக்கு 10 ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி துவங்கும். தமிழகத்தில் 9.78 லட்சம் பேர் மருத்துவ முன்களப்பணியாளர்கள் உள்ளனர். அதில் 5 லட்சம் சுகாதார பணியாளர்கள் உள்ளனர்.

தமிழகத்தில் 2 ஆம் தவணை தடுப்பூசியை செலுத்த தவறியவர்கள் 95 லட்சம் பேர் உள்ளனர். அவர்கள் விரைந்து தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். விரைவில் 2,400 பேர் சுகாதார ஆய்வாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர். மேலும், நவம்பர் 31 ஆம் தேதியுடன் ஒப்பந்தம் பணியாளர்களின் பணிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், மார்ச் 31 ஆம் தேதி வரை யாரையும் விடுவிக்க கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

cowin app vaccinationமேலும் பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும். அரசின் வழிமுறைகறை பின்பற்ற வேண்டும். தொடர்ந்து முககவசம் அணியாத நபர்களிடம் இருந்தும், அரசின் வழிகாட்டுதலை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை மாறி, மக்களே பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் வைத்தார். மருத்துவ கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளது” இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்தியாவில் 15 முதல் 18 வயதினருக்கான கொரோனா தடுப்பூசிக்கு ஜனவரி 1 ஆம் தேதி முதல் கோவின் (CoWIN) செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கோவின் இணையதள இயக்குநர் ஆர்.எஸ். சர்மா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கோவின் இணையதள இயக்குநர் ஆர்.எஸ்.சர்மா கூறுகையில், “15 முதல் 18 வயதுடைய சிறார்கள் ஜனவரி1 ஆம் தேதி முதல் கோவின் தளத்தில் முன்பதிவு செய்துக்கொள்ளலாம். தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியுடைய சிறார்கள், ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டையுடன், பள்ளி ஐ.டி கார்டை பயன்படுத்தியும் முன்பதிவு செய்து கொள்ளலாம்” எனக் கூறினார்.

மேலும் சிறப்பு ஏற்பாடாக கோவின் இணையதளத்தில், அடையாள அட்டைப் பட்டியலில் 10 ஆம் வகுப்பு அடையாள அட்டை இணைக்கப்படும் என்று கோவின் இணையதளத்தின் இயக்குநர் மருத்துவர் ஆர்.எஸ். ஷர்மா தெரிவித்துள்ளார்.