தற்போது பயன்பாட்டில் இருக்கும் தடுப்பூசிகளே ஒமிக்ரானுக்கு எதிராக ஆற்றல் தரும் என்று வெள்ளை மாளிகையின் முதன்மை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபவுசி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று  நடைபெற்ற கொரோனா குறித்த விவாத நிகழ்ச்சியில் வெள்ளை மாளிகையின் முதன்மை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபவுசி கலந்து கொண்டார். 

அப்போது அவர் பேசுகையில் “தற்போது பயன்பாட்டில் இருக்கும் தடுப்பூசிகளின்  பூஸ்டர் டோஸ் ஒமிக்ரான் வகை கொரோனா வைரசுக்கு எதிராக ஆற்றல் தரும். ஒமிக்ரானுக்கு என தனியாக தடுப்பூசி கண்டுபிடிக்க தேவையில்லை.

2 டோஸ் பைசர் தடுப்பூசிகள் ஒமிக்ரானுக்கு எதிராக முழுமையான பாதுகாப்பை தராவிட்டாலும், தீவிர நோய் பாதிப்பிலிருந்து பாதுகாப்பு தருகின்றன. தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரானுக்கு முன்னர் கொரோனா பதிப்பு ஏற்படாமல் 80 சதவீத பாதுகாப்பை அளித்த 2 டோஸ் தடுப்பூசிகளின் திறன் இப்போது 33 சதவீதமாக குறைந்துள்ளது.

ஆனாலும் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய கடுமையான பாதிப்பிலிருந்து 70 சதவீத பாதுக்காப்பை 2 டோஸ் தடுப்பூசிகள் தருகின்றன” என்று ஆண்டனி ஃபவுசி தெரிவித்துள்ளார்.

omicron america boosters

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய இயக்குநர் ரோச்செல் வாலன்ஸ்கி கூறுகையில், “அமெரிக்காவில் 36 மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் 75-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தற்போதைய கொரோனா பாதிப்பில் 3 சதவீதம் பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஆவர். நியூயார்க் மற்றும் நியூஜெர்சி பகுதிகளில் இருக்கும் தற்போதைய கொரோனா பாதிப்பில் 13 சதவீதம் பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஆவர்.

வரும் வாரங்களில் ஒமிக்ரானால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது” இவ்வாறு ரோச்செல் வாலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரான் பரவலுக்கு இடையில் அமெரிக்காவில் கொரோனாவிற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்துள்ளது. 33 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவில் இதுவரை 5 கோடி கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 

உலக அளவில் கொரோனா மரணங்களில் முதல் இடத்தில் தொடரும் அமெரிக்காவில், கொரோனாவிற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்து 8.21 லட்சத்தை எட்டியுள்ளது. 
2021-ல் மட்டும் 4.50 லட்சம் பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். 

இவர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைகழகத்தின் தரவுகள் கூறுகின்றது. இதுவரை அங்கு 60.9 சதவீதத்தினருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும், 72.6 சதவீதத்தினருக்கு ஒரு டோஸ் தடுப்பூசியும் அளிக்கப்பட்டுள்ளது. 

omicron variant america

எட்டு லட்சம் அமெரிக்க உயிர்கள் பலியானதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வருத்தம் தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களை விட தடுப்பூசி செலுத்தப்படாதவர்கள் கொரோனாவிற்கு பலியாவது 14 மடங்கு அதிகமாக உள்ளதாக அமெரிக்க அரசின் தரவுகள் கூறுகின்றன.

தற்போது ஒமிக்ரான் திரிபு வேகமாக பரவி வருவதால், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன் வர வேண்டும் என அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். அங்கு அதிக அளவிலான சிறுவர்கள், தொற்றுக்கு ஆளாவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதுவரை 72 லட்சம் குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே வரும் 2022 மார்ச் 1-ம் தேதிக்குள் அமெரிக்காவின் கொரோனா பலி எண்ணிக்கை 8.8 லட்சமாக உயரும் என வாஷிங்டன் பல்கலை கூறி உள்ளது.

உலகின் மக்கள் தொகையில் அமெரிக்காவின் மக்கள் தொகை பங்கு வெறும் 4 சதவிகிதம் மட்டுமே. ஆனால் கொரோனா உயிரிழப்புகளில் 15 சதவிகிதம் பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.