புரியாத நகைச்சுவைக்காக மன்னியுங்கள் என்று பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம் நடிகர் சித்தார்த் மன்னிப்புக்கோரினார்.

siddharth

வளர்ச்சி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக கடந்த 5-ம் தேதி பிரதமர் மோடி பஞ்சாப் பயணம் மேற்கொண்டார். பெரோஸ்பூர் மாவட்டத்தில் நடைபெற விருந்த நிகழ்ச்சிக்கு அவர் சாலை வழியாக காரில் சென்றார். அவருடன் பாதுகாப்பு வாகன அணிவகுப்பும் சென்றது. ஆனால் வழியில் உள்ள ஒரு மேம்பாலத்தில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் பிரதமர் கார் நிறுத்தப்பட்டது. 

அதனைத்தொடர்ந்து வாகன அணிவகுப்பும் தொடர முடியவில்லை. 20 நிமிடங்கள் காத்திருந்தும் நிலையில் மாற்றம் இல்லை. இதனால் பிரதமர் மோடி அங்கிருந்து திரும்பினார். அவரது நிகழ்ச்சிகளும் ரத்தாகின. பிரதமரின் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி விவகாரம் பெரும் சர்ச்சையாகி சூடுபிடித்து வருகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், சொந்த நாட்டு பிரதமரின் பாதுகாப்பிலேயே சமரசாமாக்கப்பட்டுள்ளபோது எந்த ஒரு நாடும் பாதுகாப்பாக இருப்பதாக கூற முடியாது. பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட இந்த கோழைத்தனமான தாக்குதலை நான் கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கிறேன்’ என தெரிவித்தார்.  

சானியே நேவாலின் டுவிட்டர் பதிவிற்கு பதில் அளித்த நடிகர் சித்தார்த், "உலகின் நுட்பமான சேவல் சாம்பியன். கடவுளுக்கு நன்றி. எங்களிடம் இந்தியா பாதுகாப்பாகத்தான் உள்ளது. வெட்கப்படுகிறோம்" என்று பதிவிட்டார் . அதனைத்தொடர்ந்து நடிகர் சித்தார்த்தின் இந்த பதிவு ஆபாசமாக இருப்பதாக கூறி பல்வேறு தரப்பிலும் கண்டனக்குரல்கள் எழுந்தன. பெண் என்றும் பாராமல் சாய்னா நேவாலை நடிகர் சித்தார்த் தரக்குறைவாக விமர்சித்ததாக பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு வலுத்தது.

இந்நிலையில் தனது டுவிட்டர் பதிவு தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம் நடிகர் சித்தார்த் மன்னிப்புக்கோரியுள்ளார்.  இது தொடர்பாக சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீங்கள் பதிவிட்ட டுவிட்டிற்கு பதிலாக நான் பதிவிட்ட மூர்க்கத்தனமான டுவிட்டிற்கு மன்னிப்புக்கோருகிறேன். நகைச்சுவையை பொறுத்தவரை புரிந்துகொள்ளக்கூடியதாக நகைச்சுவை இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அது நகைச்சுவையல்ல. சரியாக புரிந்துகொள்ள முடியாதபடியாக நான் பதிவிட்ட நகைச்சுவைக்கு மன்னிப்பு கோருகிறேன். இந்த விவகாரத்தை விட்டுவிட்டு எனது இந்த கடிதத்தை ஏற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். நீங்கள் எப்போதும் எனது வெற்றியாளர் தான்’ என நடிகர் சித்தார்த் பதிவிட்டுள்ளார்.