“தனது சொந்த தொகுதியில் வீடு கட்ட வேண்டும் என்கிற ஞானம், இப்போது தான் உங்களுக்கு வந்ததா?” என்று, ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிற்கு நடிகை ரோஜா, சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற அந்த மாநிலத்திற்கான உள்ளாட்சி மன்றத் தேர்தலில், பெரும்பாலான இடங்களில் அங்கு ஆளும் கட்சியாக உள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களே, அதிகம் வெற்றி பெற்றனர்.

இவற்றுடன், அந்த மாநிலத்தில் இதற்கு முன்பு ஆளும் கட்சியக இருந்த தெலுங்கு தேசம் கட்சியும், அந்த கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதியான குப்பம் தொகுதிக்கு உட்பட்ட உள்ளாட்சி பதவிகளையும் பெருமளவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியியைச் சேர்ந்தவர்களே இந்த முறை அதிகம் கைப்பற்றி வெற்றிப் பெற்றனர்.

அதுவும், சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதியான குப்பம் தொகுதியில், சந்திரபாபுநாயுடு இது வரை அங்கு 3 முறை போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றியும் பெற்றிருக்கிறார்.

இந்த சூழலில் தான், இன்றைய தினம் காலை திருப்பதி ஏழுமலையானை தரிசித்த பிறகு அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நகரி சட்டமன்ற உறுப்பினரும், நடிகையுமான ரோஜா, “சந்திரபாபு நாயுடு தன்னுடைய சொந்த தொகுதி மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதற்கு கடந்த உள்ளாட்சித் தேர்தலில் குப்பம் தொகுதி மக்கள் அளித்த தீர்ப்பே சாட்சியாக உள்ளது” என்று, தெரிவித்தார்.

அத்துடன், “தன்னை தேர்வு செய்து சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்த பொது மக்களுக்கு குடிநீர் வசதி கூட அவர் இது வரை செய்து கொடுக்கவில்லை” என்றும், பகிரங்கமாகவே, ரோஜா குற்றம்சாட்டினார்.

“ஆனால், காலம் எல்லாம் மாறியப் பிறகு, தனது சொந்த தொதியான குப்பத்தில் சொந்தமாக வீடு கட்டி கொள்வேன் என்று, இப்போது அவர் சொல்வது வேடிக்கயைக இருக்கிறது” என்றும், நடிகை ரோஜா கூறினார்.

குறிப்பாக “கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி கொடுத்த மரண அடி காரணமாகவே, சந்திரபாபு நாயுடு குப்பம் தொகுதியில் வீடு கட்டிக் கொள்வேன் என்று கூறுகிறார் என்றும், இந்த ஞானம் இதற்கு முன் அவருக்கு ஏற்படாதது ஏன்?” என்றும், நடிகை ரோஜா சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

நடிகை ரோஜாவின் இந்த பேட்டி, தற்போது ஆந்திராவில் பெரும் வைரலாகி வருகிறது.

முன்னதாக, கடந்த நவம்பர் மாதம் “நாம் என்ன செய்கிறோமோ அது தான் நமக்குத் திரும்பி வரும்” என்று, சந்திரபாபு நாயுடு கதறி அழுதது குறித்து, நடிகை ரோஜா கருத்து கூறியுள்ளது ஆந்திரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அத்துடன், “நீங்கள் வடிக்கும் இந்த போலியான நீலிக் கண்ணீருக்கு யாரும் ஆதங்கப்பட்ட மாட்டார்கள் என்றும், எனக்குத் தெரிந்து இனி நீங்கள் உங்கள் வாழ்நாளில் சட்டசபைக்குத் திரும்ப வாய்ப்பில்லை” என்றும், நடிகை ரோஜா அனல் பறக்கப் பேசினார். இதனால், ஆந்திரா அரசியலில் அப்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தற்போது சந்திரபாபு நாயுடு குறித்து, நடிகை ரோஜா மீண்டும் விமர்சித்து உள்ளார்.