அரசுப் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில், ஒரு 11 ஆம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை ஆலாந்துறை அரசுப் பள்ளியில் படித்து வரும் 11 ஆம் வகுப்பு மாணவர்களில் 2 பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.

அப்போது, அந்த இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக திடீரென்று தாக்கிக் கொண்டு உள்ளனர். 

இதில், அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் உட்பட 2 பேர் சேர்ந்து, எதிர் கோஸ்டியான 3 மாணவர்களை கத்தியால் குத்தி உள்ளனர்.

இதில், அந்த 3 மாணவர்களும் பலத்த காயத்துடன், அங்கேயே சரிந்து விழுந்துள்ளனர்.

இதனையடுத்து, அந்த வழகியாக சென்றவர்கள் ஓடி வந்து பலத்த காயம் அடைந்த அந்த 3 மாணவர்களையும் மீட்டு, உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு, அவர்களுக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் தான், ஆலாந்துறையைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன் நந்தகுமாருக்கு தலை, கழுத்து, நெஞ்சுப் பகுதியில் கத்தியால் குத்திய காயம் பலமாக இருந்த காரணத்தால், அவர் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததாக கூறப்படுகிறது. 

எனினும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில், நந்தகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால், இந்த வழக்கை கொலை முயற்சி வழக்கில் இருந்து, கொலை வழக்காக மாற்றிய ஆலாந்துறை போலீசார், 17 வயது முன்னாள் மாணவன் உட்பட 2 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்திப்பட்டு, அவர்கள் இருவரையும் போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.