“உத்தர பிரதேசத்தின் லகிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது கார் ஏற்றிய கொன்ற சம்பவம், விவசாயிகளை கொல்ல திட்டமிட்ட சதி தான்” என்று, சிறப்பு விசாரணைக்குக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் லகிம்பூரில் கடந்த 3 ஆம் தேதி அன்று விவசாயிகள் நடத்திய பேரணியின் போது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் மோதியதில், 4 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையத்து, அங்கு நடைபெற்ற கலவரத்தையும் சேர்த்து மொத்தமாக 9 பேர் வரை உயிரிழந்தனர்.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சிகள் யாவும் தொடர்ந்து மிக கடுமையாக குரல் கொடுத்த நிலையில், மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆனாலும், “இந்த விவகாரத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பாஜக தலைமையிலான மத்திய அரசு எதுவும் செய்யவில்லை” என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து, “மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தி, விவசாயிகள் இன்று நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், சர்ச்சைக்குறிய விவகாரம் தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை குழு  அமைக்கப்பட்டது. 

இதில், விவசாயிகள் உயிரிழந்தது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, தனியாக விசாரித்து வருகிறது.

அதே போல், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இது குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவையும் அமைத்தார். 

அந்தக் குழு தான் தற்போது இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டிருக்கிறது. 

இந்த சூழலில் தான் அந்த குழு நடத்திய விசாரணையில், “விவசாயிகள் கொலை செய்யப்பட்டது எதிர்பாராத விபத்து இல்லை” என்பது, தெரிய வந்துள்ளது. 

குறிப்பாக, “முன்கூட்டியே திட்டமிட்டு கொலை செய்யும் நோக்கத்துடனே இந்த சம்பவம் நடந்திருக்கிறது” என்று, தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சமர்பித்து இருக்கும் விசாரணைக் குழுவின் மனுவில் தெளிவாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

இப்படியாக, குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விசாரித்ததில் இந்த உண்மை தெரிய வந்துள்ளதாகவும்” அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் முன் ஐபிசி பிரிவு 304A பிரிவில் கொலைக்கு சமமான குற்றமற்ற கொலை, பிரிவு 279 பிரிவில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல் மற்றும் பிரிவு 338 ல் கடுமையான காயத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றை நீக்குமாறு போலீசார் விண்ணப்பித்து உள்ளனர்.

அதற்குப் பதிலாக, “ஆஷிஷ் மிஸ்ரா மீது பிரிவு 307 கொலை செய்ய முயற்சி, பிரிவு 326 ல் ஆபத்தான ஆயுதத்தால் காயப்படுத்துதல், பிரிவு 34 ல் பொது நோக்கத்திற்காக பலர் செய்த கூட்டு செயல் மற்றும் ஆயுதங்கள் சட்டம் பிரிவு 3/25 ஆகியவற்றை இணைக்கவும் அனுமதி கோரி உள்ளது. 

இவற்றுடன், இந்த விசாரணையில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என்றும், அஞ்சப்படுகிறது. இச்சம்பவம, பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

முக்கியமாக, இந்த வழக்கில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளையும் விசாரணைக் குழுவில் இணைக்க அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.