பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஹர்னாஸ் கவுர் சாந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.

susmita sen

இஸ்ரேலின் சுற்றுலாத்தளமான எய்லட் நகரில் பிரபஞ்ச அழகிக்கான போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்திற்காக பங்கேற்றனர். இந்நிலையில் இந்தியா சார்பில் பங்கேற்ற இளம்பெண் ஹர்னாஸ் கவுர் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு முன்னாள் பிரபஞ்ச அழகி மெக்சிகோவை சேர்ந்த ஆண்ட்ரியா மெசா வாகையை சூட்டினார்.

1994-ம் ஆண்டு பிலிப்பைன்ஸில் நடந்த மிஸ் யூயுனிவெர்ஸ் போட்டியில் சுஷ்மிதா சென் முதன்முறையாக மிஸ் யுனிவெர்ஸ் பட்டம் வென்ற இந்திய அழகி என்ற பெருமையைப் பெற்றார். அதன் பின்னர் கடைசியாக கடந்த 2000-ம் ஆண்டு லாரா தத்தா, மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றிருந்தார். 

இந்நிலையில் 21 வயது இளம் பெண்ணான ஹர்னாஸ் சாந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார். ஹர்னாஸ் கவுர் கடந்த 2017-ம் ஆண்டு மிஸ் சண்டிகராக தேர்வு செய்யப்பட்டார்.  மேலும் பல்வேறு அழகிப் போட்டிகளில் பங்கேற்று பட்டங்களையும் வென்றுள்ளார். ஹர்னாஸ் சாந்து பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 17 வயது முதலே மாடலிங் செய்து வரும் ஹர்னாஸ் சந்து, சில பஞ்சாபி மொழிப் படங்களிலும் நடித்துள்ளார் என்று பிடிஐ முகமை உட்பட பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியாகி உள்ளது. இவரது குடும்பம் சண்டிகரில் வசிக்கிறது. தமது பெற்றோர், கடவுள் மற்றும் மிஸ் இந்தியா அமைப்புக்கு தாம் மிகவும் நன்றிக்கடன்பட்டுள்ளதாக பட்டத்தை வென்ற ஹர்னாஸ் சந்து தெரிவித்துள்ளார்.

மேலும் இப்போட்டியில் பராகுவேவைச் சேர்ந்த நாதியா ஃபெர்ரெய்ரா இரண்டாமிடத்தையும், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த லலேலா ஸ்வான் மூன்றாமிடத்தையும் பிடித்தனர். தேர்வாளர்கள் கமிட்டியிலும் இந்தியாவைச் சேர்ந்த 2015ஆம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டம் வென்ற ஊர்வசி ரவுதாலா இடம் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.