காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், தடைப்பட்ட காதல் திருமணத்தை சாஸ்திர சம்பிரதாயத்தோடு போலீசாரே தலைமையேற்று நடத்தி வைத்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தடைப்பட்டு நின்ற காதலர்களின் திருமணத்தை, சத்தீஸ்கர் மாநில போலீசார் தான் சாஸ்திர சம்பிரதாயத்தோடு முறைப்படி நடத்தி வைத்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் மகாசமுந்த் மாவட்டம் பண்டேலி பகுதியைச் சேர்ந்த காவல் நிலையத்தில், 29 வயதான சுமன் பட்டேல் என்ற இளம் பெண், தனது காதலன் 25 வயதான ராம் குமார் பட்டேல் மீது புகார் அளிக்க வருகை தந்தார். 

இளம் பெண் சுமன் பட்டேலும் - இளைஞர் ராம் குமார் பட்டேலும், கடந்த 2 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். 

இளம் பெண் சுமன் தன்னை விட வயதில் பெரியவளாக இருந்தாலும், காதலன் ராம் குமார் அதனை ஒரு பொருட்டாக நினைக்க வில்லை. இப்படியாக, இருவரும் ஒருவரையொருவர் அளவு கடந்து மனதார காதலித்து வந்தனர்.

இப்படியாக, காதலன் ராம் குமாரை மிக அதிகமாக நேசித்த காதலி சுமன், ஒரு கட்டத்தில் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு காதலனிடம்  கேட்டிருக்கிறார். அப்போது, பெற்றோரின் சம்மதத்தோடு திருமணம் செய்துகொள்ள விரும்பிய ராம்குமார், தனது வீட்டில், காதலி சுமன் குறித்து எல்லா விவரங்களையும் பேசி இருக்கிறார்.

அப்போது, இளம் பெண் சுமனின் வயது முதிர்வைக் காரணம் காட்டிய ராம் குமார் வீட்டார், தொடர்ந்து திருமணத்தைத் தட்டிக் கழித்து வந்தனர். இதனால், காதலர்கள் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

ஒரு கட்டத்தில், தனது காதலன் அவருடைய பெற்றோரின் முடிவால் தன்னை திருமணம் செய்ய மறுத்து விடுவார் என்ற பயந்து உள்ளார். இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான இளம் பெண் சுமன், அங்குள்ள காவல் நிலையத்திற்குச் சென்று காதலன் மீதும், அவரது பெற்றோர் மீதும் புகார் அளித்துள்ளார்.

புகாரில், “என்னை திருமணம் செய்வதாகக் கூறிவிட்டு, ராம்குமார் காலம் தாழ்த்துவதாக” அந்த காதலி குற்றம்சாட்டியிருக்கிறார்.

புகாரை பெற்றுகொண்ட போலீசார், இளம் பெண் சுமனின் தரப்பு நியாயத்தை விசாரிது காதலன் ராம்குமாரையும் விசாரிக்க காவல் நிலையம் வரவழைத்தனர். இந்த விசாரணையில், காதலன் ராம்குமார், தான் சுமனை காதலித்ததையும், தனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததையும் காரணமாக கூறியுள்ளார்.

மேலும், “காதல் திருமணம் செய்ய உள்ள தங்கள் இருவருக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு” காவல் துறையினருக்கு அவர் கடிதமும் எழுதி கொடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட காவல் துறையினர், அருகிலிருந்த சிவன் கோயிலில் இருவருக்கும் திருமண ஏற்பாட்டை செய்தனர்.

அப்போது, சத்தீஸ்கர் மாநில கலாச்சார முறைப்படி, சாஸ்த்திர சம்பிர்தாயங்களோடு, சுற்றி காவல் துறை அலுவலர்கள் புடைசூழ, இளம் பெண் சுமனின் சகோதரர் முன்னிலையில் காதலர்கள் இருவருக்கும் போலீசாரே தலைமை ஏற்று மிகவும் சிறப்பாக அந்த திருமண வைபோகத்தை நடத்தி வைத்தனர். திருமணம் முடிந்ததும், காதலன் ராம்குமாரின் குடும்பமும் காதல் ஜோடிகளை ஏற்றுக் கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் இருவருக்கும் அந்த காவல் நிலைய போலீசார் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர். 

இதனிடையே, பெற்றோர் எதிர்ப்பால் தடைப்பட்ட காதல் ஜோடியின் திருமணத்தை காவல் துறையினரே தலைமையேற்று நடத்தி வைத்த நிகழ்வு, அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.