மும்பை கோயிலில் தீப்பிடித்த வழக்கில் அதிரடி திருப்பமாக, உயிரிழந்த 3 இளைஞர்களும் கோயிலுக்குள் எரித்து கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை காந்திவிலி பந்தர்பகாடி சாலையில் பிரசித்தி பெற்ற சாய்பாபா கோயில் ஒன்று அமைந்து உள்ளது. 

இந்த கோயிலில் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக அதிகாலை நேரத்தில் மிகச் சரியாக 4.15 மணி அளவில், கோயிலுக்குள் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக கோயிலுக்குள் ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீயணைப்பு படையினருக்கும் அந்த பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கோயிலுக்குள் பற்றி எரிந்த தீயை முழுமையாக அணைத்தனர். இந்த தீ விபத்தில், பூட்டப்பட்டு இருந்த கோயிலில் இரவில் படுத்துத் தூங்கிய 3 இளைஞர்கள் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். இதனையடுத்து, உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்கா அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில், உயிரிழந்தவர்களின் விபரங்கள் தெரிய வந்தது. 

அதன் படி, 25 வயதான சுபாஷ் கோடே, 25 வயதான யுவராஜ் பவார், 26 வயதான மன்னுகுப்தா ஆகியோர்கள் தான், இந்த தீ விபத்தில் உயிரிழந்தார்கள் என்பது 
கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விசாரணையில், உயிரிழந்த 3 இளைஞர்கள் மீதும் பெட்ரோல் ஊற்றப்பட்டு தீ வைத்து கொலை செய்யப்பட்ட தெரிய வந்தது.

அத்துடன், இந்த கொலையை செய்தவர் யார் என்று விசாரிக்கும் போது, கோயிலின் அருகே வசித்து வந்த 20 வயதான பாவேஷ் சந்தூர்கர், என்பதும் போலீசாரின் இந்த விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. 

“இந்த கொலை நடக்க என்ன காரணம்?” என்று போலீசார் மேலும் விசாரணை நடத்திய போது, “சம்பவத்தன்று, உயிரிழந்த யுவராஜ் பவாருக்கும், பாவேஷ் சந்தூர்கருக்கும் பேச்சு வாக்கில் திடீரென்று வாக்கு வாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால், கடும் கோபம் அடைந்த 20 வயதான பாவேஷ் சந்தூர்கர், 25 வயதான யுவராஜ் பவாரை கொலை செய்ய முடிவு செய்தார்.

இதற்காக, அந்த இளைஞர் இரவு முழுவதும் தூங்காமல் அவர்களை கொலை செய்ய தகுந்த நேரம் பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது, அந்த இளைஞர்கள் கோயிலுக்குள் சென்று தூங்கியதால், சிறுது யோசிக்காத அந்த இளைஞன், அருகில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை திருடி கோயிலில் தூங்கி கொண்டிருந்த யுவராஜ் பவார் உள்பட 3 பேர் மீதும் ஊற்றி உள்ளார். அப்போது, அங்கு குளிர் அதிகம் இருந்ததால், அந்த 3 பேரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளனர். அதன் பிறகே, அந்த இளைஞன் அந்த 3 பேர் மீதும் தீ வைத்து விட்டு, அங்கிருந்து தலைமறைவாகி உள்ளார்.

இதனையடுத்து, கோயிலுக்குள் வைத்து 3 பேரை தீ வைத்து எரித்து கொலை செய்த 20 வயதான பாவேஷ் சந்தூர்கரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடக்கத்தில், கோயிலில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தான், இந்த தீ விபத்து நடந்ததாக போலீசார் கருதினர். ஆனால், தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணையில், அது கொலை தான் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த சம்பவம், அந்த பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.