“லக்கிம்பூர் வன்முறை” தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியால் திக்கு முக்காடிப் போன மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா, கடும் கோபமடைந்து “நீங்கள் என்ன பைத்தியா?” என்று, ஒருமையில் பேசியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் லகிம்பூரில் கடந்த மாம் 3 ஆம் தேதி அன்று விவசாயிகள் நடத்திய பேரணியின் போது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் மோதியதில், 4 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையத்து, அங்கு நடைபெற்ற கலவரத்தையும் சேர்த்து மொத்தமாக 9 பேர் வரை உயிரிழந்தனர்.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சிகள் யாவும் தொடர்ந்து மிக கடுமையாக குரல் கொடுத்த நிலையில், மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனாலும், “இந்த விவகாரத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பாஜக தலைமையிலான மத்திய அரசு எதுவும் செய்யவில்லை” என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து, “மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தி, விவசாயிகள் அப்போது நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

அத்துடன், சர்ச்சைக்குறிய விவகாரம் தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை குழு அமைக்கப்பட்ட நிலையில், “லகிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது கார் ஏற்றிய கொன்ற சம்பவம், விவசாயிகளை கொல்ல நடத்த திட்டமிட்ட சதி தான்” என்று, சிறப்பு விசாரணைக்குக் குழு, கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது அறிக்கையில், பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தது.

குறிப்பாக, “ஆசிஷ் மிஸ்ரா மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்றும், சிறப்பு புலனாய்வு குழு தனது அறிக்கையைில் வலியுறுத்தி இருந்தது.

இந்த நிலையில் தான், “சிறப்பு புலனாய்வு குழு அறிக்கையை சுட்டிக்காட்டி மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என்று, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்த சூழலில் தான், நேற்றைய தினம் மத்திய அமைச்சர் அஜஸ் மிஸ்ரா, சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன் ஆஷிஸ் மிஸ்ராவை சந்தித்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். 

அப்போது, அஜய் மிஸ்ராவிடம் செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டு “ஆஷிஷ் மிஸ்ரா மீதான குற்றச்சாட்டு பற்றி” வரிசையாக கேள்வி எழுப்பினார்.

இதனால், அவர்களிடம் கடும் கோபமடைந்த மத்திய அமைச்சர் ஆஷிஷ் மிஸ்ரா, “இது போன்ற முட்டாள் தனமான கேள்விகளைக் என்னிடம் கேட்காதீர்கள். நீங்கள் என்ன மனநலம் பாதிக்கப்பட்டவரா? திருடர்களே” என்று, பயங்கர ஆக்ரோசத்துடன் பேசினார்.

அத்துடன், மத்திய அமைச்சர் என்கிற தன்நிலை மறந்த அஜய் மிஸ்ரா, கேள்வி எழுப்பிய செய்தியாளரின் மைக்கையும் அப்படியே பறிக்க முயற்சி செய்தார். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் தான், இந்த சம்பவங்கள் தொடர்பான வீடியோ வெளியாகி தற்போது இந்தியா முழுவதும் பெரும் வைரலாகி வருகிறது.

இதனிடையே, லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலையில் திட்டமிட்ட சதி என்கிற சிறப்பு புலனாய்வு குழு அறிக்கையை சுட்டிக்காட்டி,  “மத்திய அமைச்சர் பதவியில் இருந்து அஜய் மிஸ்ராவை உடனே நீக்க வேண்டும்” என்று, நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.