பள்ளி மாணவிகள் 12 பேருக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் சமீப காலமாக பல்வேறு ஆசிரியர்கள், மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக எழும் குற்றச்சாட்டில் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தான், கோத்தகிரி அருகே பள்ளி மாணவிகள் 12 பேருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மேலும் ஒரு ஆசிரியர் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்து உள்ள கீழ் கோத்தகிரியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 

இந்த பள்ளியில், கோத்தகிரி டானிங்டன் பாரதி நகரை சேர்ந்த 46 வயதான முரளிதரன் என்பவர், வரலாறு ஆசிரியராக அங்கு பணியாற்றி வருகிறார். 

பள்ளியில் இவர் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது, பள்ளி மாணவிகளிடம் வரம்பு மீறி மிகவும் ஆபாசமாக பேசுவது, மாணவிகளின் கன்னத்தை தொடுவது என, மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தாக கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட மாணவிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், இது குறித்து தங்களது வீட்டில் பெற்றோரிடம் முறையிட்டு அழுதுள்ளனர்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் 12 பேர் இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியையிடம் முறையிட்டு உள்ளனர். 

அதன் தொடர்ச்சியாகவே, பள்ளியின் தலைமை ஆசிரியை, சோலூர் மட்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் குன்னூர் துணை சூப்பிரண்டு சுரேஷ் தலைமையிலான போலீசார், விரைந்துச் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். 

இந்த விசாரணையில், ஆசிரியர் முரளிதரன் பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதும், அவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததும் உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஆசிரியர் முரளிதரனை போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்தனர். 

பின்னர், கைது செய்யப்பட்ட ஆசிரியர் முரளிதரனை போலீசார் குன்னூர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தி, அவரை கூடலூர் கிளை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.