“அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத பணம் 2.16 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக” லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்து உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தங்கமணி, வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நாமக்கல் கோவிந்தம்பாளையத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

அதுவும், அதிமுக ஆட்சி காலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், தங்கமணி வருமானத்திற்கு அதிகமாக கிட்டதட்ட 4.85 கோடி ரூபாய் சொத்துக்கள் சேர்த்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்தே, தங்கமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் நேற்று அதிகாலை முதலே லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் முடிவில்,

- கணக்கில் வராத 2.16 கோடி ரூபாய் ரொக்க பணம்
- 1.130 கிலோ தங்க நகைகள்
- 40 கிலோ வெள்ளி பொருட்கள்
- பல கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள்
- பினாமிகள் பெயரில் வாங்கி குவித்துள்ள சொத்து ஆவணங்கள்
- செல்போன்
- வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள்
- கணினி ஹார்டு டிஸ்க்குகள் 
- வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இவற்றுடன், வழக்கு தொடர்புடைய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்து உள்ளது.

முக்கியமாக, “தங்கமணி அமைச்சராக இருந்த போது, அவர் முறைகேடாக சேர்த்த பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்திருப்பதாக” முதல் தகவல் அறிக்கையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றம்சாட்டி உள்ளனர்.

குறிப்பாக, திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அதிமுக முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி மற்றும் கே.சி.வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு இருந்தன. இந்த நிலையில் தான், அதன் தொடர்ச்சியாக முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி வீட்டிலும் அதிரடி சோதனை நடத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சோதனைக்குப் பிறகு ஆவணங்களை எடுத்துச் சென்றபோது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வாகனத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, “என் வீட்டில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் எதுவும் எடுத்து செல்லவில்லை என்றும், செல்போன் மட்டும் தான் எடுத்து சென்றனர்” என்றும், முன்னாள் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.

மேலும், “அமைச்சர் செந்தில் பாலாஜியின் தூண்டுதல் காரணமாகவே எனது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதாகவும்” முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றஞ்சாட்டினார்.