மத்திய அரசு கொண்டு வரும் வங்கி சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக வங்கி ஊழியர்கள் இன்று முதல் 2 நாட்களுக்கு வெலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு திமுக ஆதரவு அளித்துள்ளது. 

பாஜக தலைமையிலான மத்திய அரசு, புதிதாக கொண்டு வந்த வங்கி சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது ஜனநாயக விரோத செயல் என்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையிலும், மத்திய அரசு இதில் பின்வாங்காமல் உள்ளதால், மத்திய அரசை எதிர்த்து இந்தியா முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் இன்று முதல் 2 நாட்களுக்கு போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் சென்னை வட்ட பொதுச்செயலாளர் கிருபாகரன், “பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்து, கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதித்துறை பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது என்றும், அந்த அறிவிப்பின் அடிப்படையில் 2 வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கான முதல்கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது” என்றும், குறிப்பிட்டார். 

“இதன் படி, 2 பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது தொடர்பான வங்கிகள் சட்ட திருத்த மசோதா 2021, நடப்பு நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதால், வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று வியாழக் கிழமை முதல் 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகவும்” அறிவித்துள்ளார்.

இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக கூடுதல் தொழிலாளர் ஆணையர், இந்திய வங்கிகள் கூட்டமைப்பு, வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள், நிதித்துறை பிரதிநிதிகள் அடங்கிய பேச்சுவார்த்தை கூட்டம் கடந்த வாரம் மும்பையில் நடைபெற்ற நிலையில், அதில் எந்த சுமுக முடிவு எட்டப்படவில்லை. அதனைத் தொடர்ந்தே தற்போது வங்கி ஊழியர்கள் தற்போது போராட்டம் வரை வந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, நாடு தழுவிய அளவில் நடைபெறும் இந்த வேலை நிறுத்தத்தில் இந்தியா முழுவதிலிருந்தும் கிட்டதட்ட 9 லட்சம் ஊழியர்கள் கலந்துகொள்கின்றனர். இதன் காரணமாக, வங்கி காசோலை, ஏடிஎம் உள்ளிட்ட வங்கிப் பரிவர்த்தனைகள் முற்றிலுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு, தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுக ஆதரவு தெரிவித்து உள்ளது.

அத்துடன், “வங்கி சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டுவது ஜனநாயக விரோத செயல்” என்றும், திமுக கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக திமுகவின் பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடன் பெற்ற விவசாயிகள், சுயதொழில் செய்யும் மகளிர், கல்விக்கடன் பெற்ற மாணவர்களிடம் மனித உரிமைகளை மீறும் மிக மோசமான நடவடிக்கைகள் மூலம் கடன்களை வசூலிக்கத் துடிக்கும் வங்கி நிர்வாகங்கள், பெரிய நிறுவனங்கள் பெற்ற கடனை வசூலிப்பதில் காட்டுவதில்லை” என்று, குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும், “உழைத்துச் சம்பாதித்துப் பொதுத்துறை வங்கிகளில் போட்டுள்ள சேமிப்புகளைக் கூட சுரண்டுவதற்கு ஏதுவாக இதுபோன்ற வங்கி சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றிவிட பா.ஜ.க. அரசு தீவிரம் காட்டுவது ஜனநாயக விரோதச் செயல்” என்றும், அமைச்சர் துரைமுருகன் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.